கோவையில் இறந்த மூதாட்டியிடம் ரூ.8.5 லட்சம் திருட்டு : ஆஸ்பத்திரி ஊழியர்கள் இருவர் கைது
கொரோனா சிகிச்சை பெற்று உயிரிழந்த மூதாட்டியின் ஏ.டி.எம் கார்டில் ரூ.8.5லட்சம் அபேஸ் செய்த 2 ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.
கோவை :
கோவையில் கொரோனா சிகிச்சையின் போது உயிரிழந்த மூதாட்டியின் ஏ.டி.எம் கார்டை திருடி 8.5 லட்சம் ரூபாய் பணத்தை திருடிய தனியார் மருத்துவமனை ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
கோவை அவினாசி சாலை சித்ரா பகுதியில் செயல்படும் கே.எம்.சி.எச். மருத்துவமனையில் கடந்த மே மாதம் கோபியை சேர்ந்த யசோதா என்கிற பெண் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், அவரது கணவர் முருகசாமி சில தினங்களுக்கு முன்பு வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்க சென்றுள்ளார்.
வங்கி கணக்கிலிருந்து ஏ.டி.எம் கார்டு மூலம் கடந்த மே மாதம் முதல் பல தவணைகளில் 8.5 லட்சம் ரூபாய் பணம் எடுக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இறந்த யசோதாவின் கணவர் முருகசாமி புகாரின் பேரில் பீளமேடு போலீசார் நடத்திய விசாரணையில், மருத்துவமனையில் பணியாற்றிய அசாம் மாநில துப்புறவு தொழிலாளிகள் ராஜ் பெங்கான், அதுல்ஜோஷி ஆகியோர் ஏ.டி.எம் கார்டை திருடி கடந்த ஒரு வருடமாக பணம் எடுத்து வந்தது அம்பலமானது.
ஏ.டி.எம் கார்ட்டின் பின்புறம் யசோதா பின் நம்பரை எழுதி வைத்திருந்ததாக தகவல் தெரியவந்துள்ளது. அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.