கோவையில் கொள்ளையனை மடக்கிப் பிடித்த பத்திரிக்கையாளர்: குவியும் பாராட்டு
இருவரும் சேர்ந்து அந்த ஆசாமியை மடக்கிப் பிடித்து பீளமேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
கோவை நீலாம்பூரில் வசிப்பவர் சித்திக். இவர் சித்ரா பகுதியில் கம்ப்யூட்டர் சேல்ஸ் மற்றும் சர்வீஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது கடையில் சிசிடிவி கேமரா பொருத்தி உள்ளார். இது அவரது செல்போனுடன் இணைக்கப்பட்டிருந்தது. இன்று அதிகாலை 4 மணியளவில் செல்போனை பார்த்துள்ளார். அப்போது கடைக்குள் ஆசாமி ஒருவர் நின்றிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அதே பகுதியில் வசிக்கும், தனது நண்பரான ஆங்கில பத்திரிக்கை நிருபர் வில்சன் என்பவருடன் தொடர்பு கொண்டார். இவர்கள் இருவரும் காரில் சித்ரா சென்றனர்.
அப்போது அந்த ஆசாமி கடைக்குள் பணம் எதுவும் கிடைக்காததால், பஸ் ஸ்டாப்புக்கு வந்தார். அங்கு வந்த அரசு பஸ்சில் ஏறினார். இதைப்பார்த்த சித்திக்கும் வில்சனும் அவரை அடையாளம் கண்டு, காரை நிறுத்தி விட்டு அதே பஸ்சில் ஏறியுள்ளனர். பஸ்சில் வைத்து அந்த ஆசாமியை கையும் களவுமாக பிடித்தனர். அப்போது அந்த ஆசாமி தான் வைத்திருந்த கூர்மையான இரும்பு ஆயுதத்தால் அவர்களை தாக்க முயன்றார். இருவரும் சேர்ந்து அந்த ஆசாமியை மடக்கிப் பிடித்து பீளமேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவனிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
போலீஸ் விசாரணையில் அந்த ஆசாமி தனது பெயரை சரவணன் என்று கூறியுள்ளார். அவரிடம் இருந்து இரும்பு ராடு,கத்தி போன்ற கூர்மையான இரும்பு கம்பி பறிமுதல் செய்யப்பட்டது. கொள்ளையனை மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைத்த பத்திரிக்கையாளர் வில்சன், வியாபாரி சித்திக் ஆகியோரை போலீசாரும், பொதுமக்களும் பாராட்டினர்.