காதலன் முகத்தில் ஆசிட் ஊற்றிய காதலி தற்கொலை முயற்சி

ராகேஷ் என்பவருடன் லிவிங் டூகெதர் முறையில் திருமணம் செய்து கொள்ளாமல் கணவன், மனைவியாக வாழ்ந்து வந்தார்.

Update: 2021-12-04 08:00 GMT

பீளமேடு காவல் நிலையம்

காஞ்சீபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெயந்தி. 27 வயதான இவர், கடந்த 4 ஆண்டுகளாக துபாயில் ஒரு ஸ்பா செண்டரில் வேலை செய்து வந்தார்.கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவகாரத்தான நிலையில், இவருக்கு ஒரு குழந்தை உள்ளது. துபாயில் ஒரு மசாஜ் செண்டரில் பணியாற்றி வந்த கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த ராகேஷ் (30) என்பவருடன் லிவிங் டூகெதர் முறையில் திருமணம் செய்து கொள்ளாமல் கணவன், மனைவியாக வாழ்ந்து வந்தார்.

இந்த நிலையில் தங்கை திருமணத்திற்காக கடந்த ஜூலை மாதம் துபாயில் இருந்து ராகேஷ் சொந்த ஊர் திரும்பியுள்ளார். அப்போது ஜெயந்தியும் சென்னைக்கு திரும்பி வந்துள்ளார். இதனிடையே கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ராகேஷ்க்கு காயத்ரி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. ராகேஷ் மனைவி உடன் மாமனார் வீட்டில் வசித்து வந்துள்ளார். இவர்களது திருமணம் குறித்து ஜெயந்திக்கு ராகேஷ் தெரியாமல் மறைத்து வைத்துள்ளார்.

இதனிடையே கடந்த 2 ம் தேதி வாட்ஸ் ஆப்பில் ஜெயந்தியை தொடர்பு கொண்ட ராகேஷ், கோவை பீளமேடு பகுதியில் உள்ள ஸ்ரீ வாரி அபார்ட்மெண்டுக்கு 3 ம் தேதி வருமாறு அழைத்துள்ளார். அதன்படி ஜெயந்தியும் அங்கு நேற்று சென்றுள்ளார். அப்போது பெற்றோர் சம்மதத்துடன் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ராகேஷிடம் ஜெயந்தி வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. அதற்கு மறுப்பு தெரிவித்த ராகேஷ் தனக்கு 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்ததைப் பற்றி தெரிவித்துள்ளார். அப்போது ராகேஷ்க்கு கொடுத்து இருந்த 18 இலட்ச ரூபாய் பணத்தை திரும்ப கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இருவருக்கும் இடையே தகராறு முற்றிய நிலையில், கைப்பையில் வைத்திருந்த ஆசிட்டை எடுத்து ராகேஷ் முகத்தில் ஜெயந்தி ஊற்றியுள்ளார். இதில் அவரது இடது கண்ணில் காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் கத்தியால் தாக்கியதில் ராகேஷின் வலது பெருவிரலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே அதிகளவு தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு ஜெயந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து இருவரும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருவர் தரப்பிலும் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகார்களின் பேரில் ஜெயந்தி மற்றும் ராகேஷ் இருவர் மீதும் தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து பீளமேடு காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News