பாஜக கூறும் பொய்களை நம்பி ஏமாந்து விடாதீர்கள் : திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் பேச்சு
உங்களிடம் நிறைய பொய் சொல்லி வருவார்கள், இதை எல்லாம் நம்பி ஏமாந்து விடாதீர்கள்.
சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சித்தாப்புதூர் பகுதியில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் பிரச்சாரத்தை துவக்கினார். அப்போது அப்பகுதி பொதுமக்கள் மலர் தூவி வேட்பாளரை வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து, கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் திமுக அரசின் சாதனை கூறி உதயசூரியனுக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து அரிபுரம், சின்னசாமி நாயுடு சாலை, காந்திபுரம், அலமு நகர், பாலாஜி நகர், மட்டசாலை, செங்காடு, காந்தி மண்டபம், காய்கடை சந்திப்பு, பாப்பநாயக்கன் புதூர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்ற வேட்பாளர் கணபதி ராஜ்குமார் வாக்குகளை சேகரித்தார்.
அரிபுரம் பகுதியில் கணபதி ராஜ்குமார் வாக்குகேட்டு பேசுகையில், “இந்திய கூட்டணி சார்பாக திராவிட முன்னேற்ற கழகத்தின் மாண்புமிகு தமிழக முதல்வரால், கோவை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இங்கு வாக்குகளை சேகரிக்க வந்துள்ளேன். இந்தப் பகுதியை எனக்கு நன்கு தெரியும். நான் இங்கே வடக்கு மாமன்ற தலைவராக பணியாற்றிய காலம் முதற்கொண்டு, நன்கு அறிவேன். திமுக அரசு செய்த, செய்கின்ற சாதனைகளை எல்லாம் கூறி நாங்க, வாக்குகள் சேகரித்து வருகின்றோம்.
நமது முதலமைச்சர் சிறப்பாக செயல்பட்டு, கடந்த தேர்தலின் போது அறிவித்த வாக்குறுதிகள் மட்டுமல்ல, அறிவிக்காத வாக்குறுதிகளையும் செய்துள்ளார். மகளிர் உரிமைத் தொகை, மகளிர் இலவச பேருந்து பயணம் உள்ளிட்டவைகள் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மகளிர் உரிமைத்தொகை விடுபட்டவர்களுக்கு தேர்தல் முடிந்தவுடன் கிடைக்கப்பெறும்.
திமுக அரசின் சாதனைகளைக் கூறி தான் உங்களிடம் வாக்குகளை சேர்த்து வருகின்றோம். ஆனால் எதிரணியில் இருக்கக்கூடிய வெளியூரை சேர்ந்த வேட்பாளர்களுக்கு எல்லாம் அரிபுரம் தெரியாது. இந்தப் பகுதி மக்களின் பிரச்சினைகள் என்னவென்று தெரியாது. அவர்களை நம்பி ஏமாந்து விடாதீர்கள், கேஸ் சிலிண்டர் விலை ஏற்றம், பெட்ரோல் - டீசல் விலையேற்றம், கட்டுப்படுத்தாத ஒன்றிய பாஜக அரசு, மீண்டும் ஆட்சிக்கு வந்தால் விலையேற்றத்தை கட்டுப்படுத்துவார்களா? இதை நம்ப முடியுமா? பொய்யான வாக்குறுதிகளை கூறி வாக்கு கேட்பார்கள் அதை நம்பி ஏமாந்து விடாதீர்கள். ஒன்றிய பாஜக அரசால் விலையேற்றம், நிதி அளிப்பதில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டது. இதையெல்லாம் மறந்துவிடக்கூடாது. உங்களிடம் நிறைய பொய் சொல்லி வருவார்கள், இதை எல்லாம் நம்பி ஏமாந்து விடாதீர்கள்.
இந்த பகுதியில் உள்ளவர்களுக்கு வீடுகள் வேண்டும் என்று கேட்டு உள்ளீர்கள் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பட்டாவோ, அல்லது வேறிடத்தில் வீடோ உங்களுக்கு ஏற்பாடு செய்வதற்காக அமைச்சரிடம் பேசி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தேர்தல் முடிந்தவுடன் முழு வீச்சில் அதை செய்து கொடுப்போம் என்பதை நாங்கள் உத்திரவாதம் கொடுக்கின்றோம். நாங்கள் என்றைக்கும் கூட இருப்போம். நான் கூப்பிடும் தூரத்தில் தான் இருக்கின்றேன். மக்களுடன் மக்களாக இருக்க வேண்டும் என முதல்வர் உத்திரவிட்டுள்ளார். அதனால் உங்களிடத்தில் தான், நாங்கள் இருப்போம், உங்கள் குறைகளை தீர்த்து வைப்போம் என்று கூறி வாக்கு சேகரித்தார்