கோவையில் தடுப்பூசி தட்டுப்பாடு: ஏமாற்றத்துடன் திரும்பிய மக்கள்!
போதிய அளவு தடுப்பூசிகள் இல்லாததால், கோவை மாவட்டத்தில் உள்ள தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர்.;
கோவை மாவட்டத்துக்கு, கடந்த மாதம் 21-ஆம் தேதி முதல் தமிழக அரசு, 83 ஆயிரத்து 700 தடுப்பூசிகள் வழங்கியுள்ளது. இதில் 18 முதல் 45 வயதுக்குட்பட்டவர்களுக்கு 82 ஆயிரத்து 573 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 5 லட்சத்து 27 ஆயிரத்து 189 தடுப்பூசிகள் தற்போது வரை செலுத்தப்பட்டுள்ளது.
அவ்வகையில், கோவை மாவட்டத்தில் 88 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மாநகராட்சிக்குட்பட்ட 36 பள்ளிகள் என 124 தடுப்பூசி மையங்களில் மத்திய அரசிடமிருந்து பெறப்பட்ட 48,000 தடுப்பூசிகள் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தப்பட்டு வந்தது.
எனினும், மாவட்ட நிர்வாகத்திடம் கையிருப்பில் போதிய அளவு தடுப்பூசிகள் இல்லாததால், கோவை மாவட்டத்தில் உள்ள தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி இல்லை என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
இதனால், கோவையில் பல இடங்களில், தடுப்பூசி செலுத்திக் கொள்ள இன்று ஆர்வத்துடன் வந்த பொதுமக்கள் பலர், தடுப்பூசி போடப்படாததை அறிந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். தடுப்பூசி தட்டுப்பாடு இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசை அவர்கள் கேட்டுக் கொண்டனர்.