கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் ஊழலா?மருத்துவமனை டீன் விளக்கம்!
கோவை இஎஸ்ஐ மருத்துவமனை மீதான ஊழல் புகார் எழுந்துள்ள நிலையில், அது குறித்து விசாரிக்கப்படும் என்று, மருத்துவமனை டீன் ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.
கோவை இஎஸ்ஐ மருத்துவமனை மீது, ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அதன் டீன் ரவீந்திரன், இன்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
கொரோனா இரண்டாவது அலையில் மிக தீவிரமான சூழலில், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணி செய்து வருகிறோம். தினமும் நூற்றுக்கணக்கான கொரோனா நோயாளிகளை குணப்படுத்தி வீட்டுக்கு அனுப்பி வைத்து வருகிறோம்.
இந்த சூழலில், குறிப்பிட்ட ஒரு சில பத்திரிகைகள் அவதூறு பரப்பும் விதமாக இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிடி ஸ்கேன் எடுப்பதற்கு ஆயிரம் ரூபாய் வசூலிப்பதாகவும், ஆக்சிஜன் படுக்கைக்கு ரூபாய் 7000 வாங்குவதாகவும் பொய்யான குற்றச்சாட்டை பரப்பி வருகின்றனர்.
ஆனால் உயிரை பணயம் வைத்து கொரோனா சூழலில் பணி செய்து வருகிறோம். புகாரில் உண்மை இருந்தால் அதன் மீது நடவடிக்கை எடுக்க தயாராக இருக்கிறோம். கோவை வந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மருத்துவர்களிடம் மிக அன்பாக பேசியதும், கடுமையான இச்சூழ்நிலையை சமாளிக்க நானும் இருப்பதாக எங்களிடம் வாக்குறுதி அளித்தது எனக்கு பிடித்ததது.
அதுபற்றிதான் டிவியில் கூறினேன். அது என்னுடைய சொந்தக் கருத்து. இரண்டாவது அலையில் கூடுதலான படுக்கையிலும் மருத்துவமனைக்கு தேவையான வசதிகளையும் ஏற்படுத்தி உள்ளோம் என்று அவர் கூறினார்.