திமுக ஆட்சிக்கு வந்ததும் அமைச்சர் வேலுமணி மீது ஊழல் வழக்கு பாயும் என கோயமுத்தூரில் திமுக தலைவர் ஸ்டாலின் கூறினார்.
கோவை கொடிசியா மைதானத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்ற உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பொதுமக்களிடம் இருந்து புகார் மனுக்களை பெற்றுக் கொண்டு ஸ்டாலின் பேசியதாவது, திமுக சார்பில் பெறப்படும் மக்களின் கோரிக்கைகளுக்கு 100 நாட்களில் தீர்வு காணப்படும்.உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி, அவர் மீதான ஊழல் புகாருக்கு எந்த பதிலும் அளிப்பதில்லை. கோவையில் உள்ளாட்சித்துறை அமைச்சர், அவரது உறவினர்கள் மற்றும் பினாமிகளால் மாநகராட்சியில் பல ஊழல்களை செய்து வருகின்றார். கோவையில் அமைச்சராக வேலுமணியின் அண்ணன் அன்பரசன் வலம் வருகிறார்.
இவர்களுக்கு சொந்தமான, 2011-12ல் தொடங்கப்பட்ட நிறுவனத்தின் வருவாய் தற்போது 3000 சதவீதமாக அதிகரித்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்ததும் அமைச்சர் வேலுமணி மீது ஊழல் வழக்கு பாயும். கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை என பொய் சொல்லி வருகின்றனர். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதில் ஓட்டை விழுந்து விட்டது. கூடிய விரைவில் அதை குழிதோண்டி புதைக்க திமுகவினர் உறுதியேற்போம் எனத் தெரிவித்தார்.