தமிழக மக்களின் உரிமைகளை பிரதமர் மோடி விற்பனை செய்கிறார் என கோவையில் ராகுல்காந்தி கூறினார்.
தமிழ்நாட்டில் 3 நாட்கள் தேர்தல் பரப்புரைக்காக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனிவிமானம் மூலம் டெல்லியில் இருந்து கோவைக்கு வருகை தந்தார். கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் உள்ளிட்ட பகுதிகளில் ராகுல்காந்தி பரப்புரை மேற்கொள்கிறார். கோவை விமான நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினர் ராகுல்காந்திக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். ராகுல்காந்தி வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதையடுத்து சித்ரா பகுதியில் ராகுல்காந்தி பொதுமக்களிடையே உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், தமிழகத்திற்கு வருவது எப்போதும் மகிழ்ச்சி. ஒரே நாடு, ஒரே மொழி என ஒரே விதமான செயல்பாடுகளை கொண்டு வர முயல்கின்றனர். பிரதமர் மோடி தமிழ்மொழி ,கலாச்சாரம் போன்றவற்றை இரண்டாவதாக கருதுகிறார். இந்தியாவில் பல்வேறு விதமான கலாச்சாரம், வாழ்க்கை முறை இருப்பதை நாங்கள் நம்புகின்றோம். பல்வேறு மொழிகளுக்கு சமமான உரிமை இருப்பதாக உறுதியாக நம்புகின்றோம். காங்கிரஸ் கட்சிக்கும், மோடிக்கும் உள்ள வேறுபாடு இதுதான். பிரதமர் மோடி தனது தொழிலதிபர் நண்பர்களுக்காக செயல்படுகின்றார். தமிழக மக்களின் உரிமைகளை மோடி விற்பனை செய்கிறார் என அவர் தெரிவித்தார்.