போதை மாத்திரைகள் விற்பனை செய்த 7 பேர் கைது

கோவையில் இரு வேறு சம்பவங்களில் போதை மாத்திரை விற்ற ஏழு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்;

Update: 2023-05-13 12:18 GMT

கோவை மாநகரில் போதைப்பொருள், கஞ்சா விற்பனையை தடுக்க காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். போதைக்கு அடிமையான இளைஞர்கள் சிலர் வலி நிவாரணி மாத்திரைகளை வாங்கி அதனை நீரில் கரைத்து ஊசி மூலம் உடலுக்குள் செலுத்தி போதை ஏற்றி வருகின்றனர். மேலும் மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் வலி நிவாரணி மாத்திரைகளை மருந்து கடைகளில் விற்க கூடாது எனவும் காவல்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

இந்நிலையில், கோவை கடைவீதி அருகே காந்திநகர் பண்ணாரி அம்மன் கோவில் அருகே ஒரு கும்பல் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபடுவதாக கடைவீதி காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், கடைவீதி காவல்துறையினர் அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த நால்வரை பிடித்து விசாரித்ததில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.

சந்தேகமடைந்த காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்ட போது அந்த கும்பல் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனையடுத்து போதை மாத்திரை விற்பனை கும்பலை சேர்ந்த வேலாண்டி பாளையத்தை சேர்ந்த கணேஷ் பாபு (வயது24), பீளமேடு ஆவாரம் பாளையம் இளங்கோ நகரை சேர்ந்த சரவணன் (31), இடையர்பாளையத்தை சேர்ந்த கணேஷ்குமார் (21), திருச்சி ரோடு ஹைவே காலனியை சேர்ந்த ஜான் ஜோசப் (31) ஆகிய நான்கு பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 85 போதை மாத்திரைகள், 4 செல்போன்கள், ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் ஒரு கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் கைது செய்யப்பட்ட 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதேபோல், பீளமேடு ஆவாரம்பாளையம் சோபா நகர் மாநகராட்சி பூங்கா அருகே போதை மாத்திரை விற்பனை செய்த ஆவாரம்பாளையம் இளங்கோ நகரை சேர்ந்த சுஜித் (25), ஜெகநாதபுரத்தை சேர்ந்த சிவசூரியன் (23) மற்றும் புலியகுளம் மருதாச்சலம் தெருவை சேர்ந்த வெங்கடேஷ்குமார் (22) ஆகிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 100 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்து, மூவரையும் சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News