புயல் பாதிப்பு: கோவையில் இருந்து சென்னைக்கு 1 டன் காய்கறி, 1.5 டன் அரிசி
தன்னார்வலர்கள் உதவியுடன் நிவாரண பொருட்கள் திரட்டப்பட்டு சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.;
மிக்ஜம் புயல் காரணமாக சென்னையில் கனமழை கொட்டி தீர்த்தது. 1 அரை லட்சம் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியில் வரமுடியாமல் தவிக்கின்றனர்.
இந்நிலையில்அவர்களுக்கு தேவையான உணவு, பால், குடிநீர் உள்ளிட்டவை கிடைக்காமல் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு தமிழக அரசு சார்பில் தேவையான பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ஒவ்வொரு மாவட்ட நிர்வாகம் சார்பிலும் நிவாரண பொருட்கள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
அதன்படி கோவை மாவட்ட நிர்வாகம் சார்பிலும் தன்னார்வலர்கள் உதவியுடன் நிவாரண பொருட்கள் திரட்டப்பட்டு சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
1.045 டன் பால் பவுடர், 1.5 டன் அரிசி, 1 டன் காய்கறிகள், 25 ஆயிரம் நாப்கின்கள், 1090 படுக்கை விரிப்புகள், 3 ஆயிரம் மெழுகுவர்த்தி, 13 ஆயிரம் பிஸ்கெட் பாக்கெட்டுகள், 5 ஆயிரம் லிட்டர் தண்ணீர் பாட்டில்கள், 2,700 பிரெட் பாக்கெட்டுகள் உள்ளிட்ட பொருட்கள் சேகரிக்கப்பட்டது.
இவை அனைத்தும் கோவைமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து லாரி மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் கிரந்திகுமார் பாடி, மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா உள்ளிட்டோர் பார்வையிட்டு அனுப்பி வைத்தனர்.
இதேபோல் மாவட்ட நிர்வாகம் சார்பில் கோவை ஆர்.எஸ்.புரத்தில் இருந்து நிவாரண பொருட்கள் லாரி மூலமும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்த பொருட்கள் அனைத்தும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்கப்படுகிறது.
பேரிடர் ஏற்படும் போதெல்லாம் கோவை மாவட்ட மக்கள் உதவி வருகிறார்கள். தொண்டு நிறுவனங்கள், மாநகராட்சி மற்றும் அரசு ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு நிவாரண பொருட்களை சென்னைக்கு அனுப்பி வைக்கிறார்கள்.
உணவு பொருட்கள் மற்றும் நிவாரண பொருட்களை கொண்ட தனி விமானம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. சென்னை சென்றதும் அங்கு மண்டலவாரியாக பிரித்து சரியான முறையில் வினியோகிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.