கோவை மாநகராட்சி ஆணையாளராக ராஜகோபால் சுங்கரா பதவியேற்பு
கோவை மாநகராட்சி ஆணையாளராக ராஜகோபால் சுங்கரா இன்று பதவியேற்றுக் கொண்டார்.
கோவை மாநகராட்சி ஆணையாளராக இருந்த குமாரவேல் பாண்டியன் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக சென்னை மாநகராட்சி தெற்கு மண்டல துணை ஆணையாளராக இருந்த ராஜகோபால் சுங்கரா, கோவைக்கு நியமிக்கப்பட்டார். இதையடுத்து கோவை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று ராஜகோபால் சுங்கரா ஆணையாளராக பதவியேற்றுக் கொண்டார். இவர், பத்மநாதபுரத்தில் உதவி ஆட்சியராகவும், கடலூரில் கூடுதல் ஆட்சியராகவும் பணியாற்றி அனுபவம் கொண்டவர்.
பதவி ஏற்ற பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராஜகோபால் சுங்கரா, கோவை மாநகராட்சி தமிழ்நாட்டில் இரண்டாவது பெரிய மாநகராட்சி. இங்கு நாளொன்றுக்கு 500 கொரோனா பாதிப்புகள் ஏற்படுகின்றன. கொரோனாவை கட்டுப்படுத்த முன்னுரிமை அளிக்கப்படும்.
கோவிட் மூன்றாவது அலை ஏற்பட்டால் அதனை சமாளிக்க, கோவையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்யப்படும். மக்கள் குறைதீர்ப்பு மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த, முன்னுரிமை அளிக்கப்படும். சென்னையை போல கோவை மாநகராட்சியை முகநூல், டிவிட்டர், போன் நம்பர் மூலம் எளிதில் தொடர்பு கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.