கோவை புறவழிச்சாலை திட்டம் எப்போது நிறைவேறும்? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
கோவை புறநகருக்கு பயன் தரும் மூன்று முக்கிய திட்டங்களும் முடங்கி கிடக்கிறது. என மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.;
அன்னூரில் போக்குவரத்து நெரிசல்
தமிழகத்தின் முக்கியமான தேசிய நெடுஞ்சாலைகளில் ஒன்றாக தேசிய நெடுஞ்சாலை . 209 உள்ளது. திண்டுக்கல்லில் துவங்கி, உடுமலை, பொள்ளாச்சி, கோவை, சரவணம்பட்டி, அன்னுார், புளியம்பட்டி, சத்தி, பண்ணாரி வழியாக கர்நாடகா செல்கிறது.
அன்னுார் பகுதியில் வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளதால் கோவில்பாளையம், அன்னுார், புளியம்பட்டியில், தினமும் காலை மற்றும் மாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாகனங்கள் நீண்ட தொலைவில் வரிசையில் நிற்கின்றன. இதற்கு தீர்வாக புறவழிச் சாலை அமைக்க வேண்டும் என 25 ஆண்டுகளாக அன்னுார் மக்கள் போராடி வருகின்றனர்.
இதையடுத்து 2020ல் முழுமையான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்தத் திட்டத்தில் குரும்பபாளையம் சாலையில் துவங்கி 19 கி.மீ., சென்று அன்னுாரை அடைகிறது. பின்னர் புளியம்பட்டி, சத்தி வழியாக கர்நாடக எல்லை வரை இந்த புறவழிச் சாலை அமைகிறது. சில இடங்களில் ஏற்கனவே உள்ள தேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்தப்படுகிறது. பெரும்பாலான இடத்தில் புறவழிச் சாலை அமைக்கப்படுகிறது,
இதற்கு நிலம் கையகப்படுத்த நில உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் தரப்பட்டது. கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. இதைத்தொடர்ந்து கடந்த 2022 பிப்ரவரியில் புறவழிச்சாலை அமையும் இடங்களில் உள்ள நிலங்களை வாங்கவோ விற்கவோ கூடாது என அரசு உத்தரவு பிறப்பித்தது. ஆனால் இந்த பணிகள் நடந்து ஒன்றரை வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது. அதன் பிறகு எந்த முன்னேற்றமும் இல்லை. இந்தத் திட்டம் வருமா வராதா என்னும் நிலை நீடிக்கிறது.
அன்னுாரில் இருந்து கோவை செல்லும் பாதையில் கரியாம்பாளையத்தில் துவங்கி குமாரபாளையம், சொக்கம்பாளையம், நாகமாபுதுார், அல்லிகுளம் வழியாக அய்யப்பரெட்டிபுதுாரில் முடிவடையும்படி கிழக்கு புறவழிச் சாலைக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. நில உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் தரப்பட்டது. அதன் பிறகு திட்டத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை.
கரூரிலிருந்து திருப்பூர் மாவட்டம் வழியாக கோவை மாவட்டத்தில் அன்னுார் அருகே குன்னத்தூர் வழியாக மேட்டுப்பாளையம் சாலையில் நரசிம்மநாயக்கன்பாளையத்தில் இணையும்படி வட்டச்சாலைக்கு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு நில உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு ஐந்து ஆண்டுகள் ஆகியும் பணியில் எந்த முன்னேற்றமும் இல்லை.
கோவை - சத்தி தேசிய நெடுஞ்சாலையிலும், கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையிலும், அவிநாசியில் இருந்து அன்னுார் வழியாக மேட்டுப்பாளையம் செல்லும் சாலையிலும், போக்குவரத்து நெரிசல் தொடர் கதையாக உள்ளது. மத்திய, மாநில அரசுகளின் மூன்று முக்கிய திட்டங்களும் பல ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கின்றன..
இதுகுறித்து அன்னூர் பொதுமக்கள் கூறுகையில், நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரித்து வருகிறது. தினமும் அன்னுார் மார்க்கத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன. எனவே, அரசு விரைவில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் மற்றும் புறவழிச் சாலை பணிகளை துவக்க வேண்டும் என்று கூறினார் .