போலி டாக்டரை சிக்கவைக்க நோயாளிகளாக நடித்த காவல்துறையினர்

மருத்துவம் படிக்காமல் சிகிச்சை அளித்த போலி டாக்டர் தேவராஜ் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Update: 2024-01-24 10:08 GMT

கைது செய்யப்பட்ட போலி டாக்டர் 

கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள நீலிக்கோணாம்பாளையம் ரோட்டில் ஒருவர் உரிய மருத்துவ படிப்பு இல்லாமல் கிளினிக் வைத்து நடத்தி வருவதாக கோவை மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் ராஜசேகரனுக்கு தகவல் வந்தது. பின்னர் இது குறித்து சிங்காநல்லூர் காவல்துறையினர் மற்றும் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் ராஜசேகரன் தலைமையில் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் தகவல் வந்த கிளினிக்கிற்கு விரைந்து சென்றனர். அந்த கிளினிக்கிற்குள் நோயாளிகளை போல காவல்துறையினர் நுழைந்தனர். அப்போது தேவராஜ் (வயது 54) என்பவர் அங்கு சிகிச்சை அளித்துக் கொண்டு இருந்தார். உடனடியாக விரைந்து சென்ற இணை இயக்குனர் தலைமையிலான குழுவினர் மருத்துவம் பார்த்த தேவராஜிடம் மருத்துவம் படித்தற்கான சான்றிதழை கேட்டனர். அவரிடம் மருத்துவம் படித்தற்கான உரிய ஆவணங்கள் இல்லை என்பது தெரிய வந்தது.

விசாரணையில் அவர் பிளஸ்-2 வரை மட்டுமே படித்து வந்ததும், இந்த கிளினிக்கை நடத்தி வந்த டாக்டர் இறந்ததும், அதன்பின் கடந்த ஒரு ஆண்டுகளாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தது தெரிய வந்தது.

இது குறித்து மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் மருத்துவம் படிக்காமல் சிகிச்சை அளித்த போலி டாக்டர் தேவராஜ் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் காவல்துறையினர் போலி டாக்டர் தேவராஜை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News