சூலூர் அருகே ஊராட்சி துணை தலைவரை அரிவாளால் வெட்டி நகை, பணம் கொள்ளை

சூலூர் அருகே போகம்பட்டி ஊராட்சி துணை தலைவரை அரிவாளால் வெட்டி நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Update: 2023-02-15 10:36 GMT

காட்சி படம் 

கோவை மாவட்டம் சூலூர் பாப்பம்பட்டி லட்சுமி கார்டனை சேர்ந்தவர் ராஜ்குமார். தி.மு.க பிரமுகரான இவர் போகம்பட்டி ஊராட்சி துணை தலைவராகவும் இருந்து வருகிறார்.

இவருக்கு திலகவதி என்ற மனைவி உள்ளார். இந்த நிலையில் ராஜ்குமார், அவரது மனைவி திலகவதி, ராஜ்குமாரின் தாயார் வீட்டில் இருந்தனர். அப்போது வீட்டிற்குள் ஐந்து பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் புகுந்தனர். அவர்களிடம், உனது சகோதரர் ரமேஷ் எங்கே இருக்கிறார் என திலகவதியிடம் கேட்டனர். அதற்கு அவர் தெரியாது என பதில் அளித்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த கும்பல் பட்டா கத்தி மற்றும் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் ராஜ்குமார், திலகவதி மற்றும் ராஜ்குமாரின் தாயாரை வெட்டினர். மேலும் வீட்டில் இருந்த 11 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சம் பணத்தையும் கொள்ளையடித்தனர்.

இதில் அவர் பலத்த காயம் அடைந்து சத்தம் போட்டனர். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வருவதை பார்த்த கும்பல் அங்கிருந்து தப்பியோடியது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் கருமத்தம்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் ஆனந்த் ஆரோக்கியராஜ், சூலூர் காவல் ஆய்வாளர் மாதையன் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், திலகவதியின் சகோதரர் ரமேஷ் என்பவர் அந்த பகுதியில் பொதுமக்களிடம் அதிக வட்டி தருவதாக கூறி கோடிக்கணக்கான பணம் வசூலித்ததாகவும், அதனை கொடுக்காமல் ஏமாற்றி விட்டு தலைமறைவாகி விட்டதும், இது தொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கு நடப்பதும் தெரியவந்தது.

இதன் காரணமாகவே ஐந்து பேர் கும்பல் வீட்டிற்குள் புகுந்து மிரட்டி உள்ளனர். ஆனால் நகை, பணத்தை எதற்காக கொள்ளையடித்து சென்றனர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News