பரம்பிக்குளம் ஆழியார் பாசனம்: கால்வாய் பராமரிப்பு பணிகள் தீவிரம்

பரம்பிக்குளம் ஆழியார் பாசன மூன்றாம் மண்டலத்திற்கு நீர் திறக்கப்படவுள்ளதால், கால்வாய் பராமரிப்பு பணிகள் துவங்கியுள்ளன;

Update: 2022-12-17 09:52 GMT

பிஏபி கால்வாய் பராமரிப்புப்பணிகள்

பி.ஏ.பி., பாசன திட்டத்தின் கீழ், கோவை, திருப்பூர் மாவட்டத்திலுள்ள, 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்நிலங்கள் நான்கு மண்டலங்களாக பிரித்து, சுழற்சி முறையில் நீர் வழங்கப்பட்டு வருகிறது

அதன்படி 2ம் மண்டல பாசனத்திற்குட்பட்ட, 94 ஆயிரத்து, 201 ஏக்கர் நிலங்களுக்கு, கடந்த, ஆக., 26ல் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த மண்டலத்திற்குட்பட்ட பாசன நிலங்களுக்கு, நான்கு சுற்றுக்கள் நீர் வழங்கப்பட்டது. நீர் திறப்பு குறித்து விவசாயிகள் கருத்து கேட்பின்போது, காண்டூர் கால்வாயில் நிலுவையிலுள்ள புதுப்பிக்கும் பணி மற்றும் பிரதான கால்வாயில், பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ள, 4 இடங்களில், புதுப்பிக்கும் பணி மேற்கொள்ள வேண்டும் என கூறப்பட்டது.

நடப்பாண்டு இரண்டு மண்டல பாசனத்திற்கும், 4 சுற்றுக்கள் நீர் வழங்கி, விரைவில் பாசனத்தை நிறைவு செய்து, பராமரிப்பு பணிகள் துவக்க திட்டமிடப்பட்டது. அதன் அடிப்படையில், இரண்டாம் மண்டல பாசனம் தற்போது நிறைவு பெற்றுள்ளது. அடுத்து, மூன்றாம் மண்டல பாசனத்திலுள்ள, 94 ஆயிரத்து, 362 ஏக்கர் நிலங்களுக்கு, ஜன., 1 முதல் நீர் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

நீர் திறப்புக்கு குறுகிய காலமே உள்ளதால், மூன்றாம் மண்டல பாசனத்திற்குட்பட்ட, கிளைக்கால்வாய், பகிர்மான கால்வாய் மற்றும் உப கால்வாய்களில் பராமரிப்பு பணி துவங்கியுள்ளது. கிளைக்கால்வாய்களில், பொதுப்பணித்துறை அதிகாரிகளும், உப-கால்வாய்களில், நீரினை பயன்படுத்துவோர் சங்கம் வாயிலாகவும், புதர்கள் அகற்றப்பட்டு, கால்வாய்கள் துார்வாரும் பணி துவங்கியுள்ளது.

உப கால்வாய்கள், பாசன சங்கங்கள் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், போதிய நிதி ஆதாரம் இல்லாமல், தவித்து வருகின்றனர். மேலும், புதிய நிர்வாகிகள் பதவி ஏற்றுள்ள நிலையில் பழைய பாசன சங்க நிர்வாகிகள், பெரும்பாலான சங்கங்களில், வரவு-செலவு கணக்குகளை ஒப்படைக்காமலும், வங்கி ஆவணங்களை மாற்றி தருவதிலும் தாமதம் ஏற்பட்டு வருகிறது.இதனால், பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

எனவே, மூன்றாம் மண்டல பாசனத்தின் கீழ் வரும், கால்வாய்களை ஆய்வு செய்து, உரிய நிதி விடுவிக்க வேண்டும். பழைய நிர்வாகத்தினரிடமிருந்து, கணக்குகளை மாற்றி தரவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதே போல், கடந்த இரு ஆண்டுக்கு முன், மேற்கொள்ளப்பட்டது போல், கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்படும், வேலை உறுதித்திட்ட பணியாளர்களைக்கொண்டு, விரைவில் துார்வார மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

ஆண்டு துவக்கத்திலேயே, விவசாயிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தில், 2 மற்றும் 3ம் மண்டல பாசனத்திற்கு, 4 சுற்றுக்களில், 7,600 மில்லியன் கனஅடி நீர் வழங்க முடிவு செய்யப்பட்டது.

தற்போது, இரண்டாம் சுற்று நிறைவு பெற்றுள்ள நிலையில், மூன்றாம் சுற்றுக்கும் விரைவில் நீர் திறக்கப்படும். நடப்பாண்டு பருவ மழை காரணமாக திட்ட தொகுப்பு அணைகளில் போதிய நீர்இருப்பு உள்ளது.

இரண்டாம் மண்டல பாசனம் நிறைவு பெற்றவுடன், பிரதான கால்வாய், கிளைக்கால்வாய்களில், மூன்றாம் மண்டலத்திற்கு நீர் திறப்பதற்கு மடைகள் மாற்றி அமைத்தல், முட் செடிகள், புதர்கள், குப்பை அகற்றப்பட்டு, சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்படுகிறது.

ஒன்றரை ஆண்டுக்கு மேலாக நீர் வராததால், மூன்றாம் மண்டல பாசனத்திலுள்ள, உப கால்வாய்கள் புதர் மண்டி காணப்படுகிறது. அவற்றை, தூர்வார சம்பந்தப்பட்ட பாசன சங்க நிர்வாகிகள் மற்றும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மூன்றாம் மண்டல பாசனத்திற்கு நீர் திறப்பது குறித்து விவசாயிகளிடம் கருத்து கேட்டு, அரசுக்கு பரிந்துரை செய்து, அரசு உத்தரவு அடிப்படையில் நீர் திறக்கப்படும். வழக்கமாக பொங்கலுக்கு பின் நீர் திறக்கப்படும். இந்தாண்டு 15 நாட்களுக்கு முன், மூன்றாம் மண்டல பாசனத்திற்கு நீர் திறக்கப்பட உள்ளது.

Tags:    

Similar News