கோவை மாநகராட்சி பகுதிகளில் இன்று தடுப்பூசி முகாம் இல்லை
தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக கோவை மாநகராட்சி பகுதிகளில் இன்று கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு சில நாட்களாக மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. அதேபோல் கோவை மாநகராட்சி பகுதிகளில் கொரோனா தொற்று பரவலைத் தடுக்க மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி செலுத்திக் கொள்கின்றனர்.அதேசமயம் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக அவ்வப்போது தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தப்படுகின்றன. தடுப்பூசி வந்த பின்னர் அப்பணிகள் மீண்டும் நடப்பதுமாக இருந்து வருகிறது.
இந்நிலையில் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக கோவை மாநகராட்சி பகுதிகளில், இன்று வெள்ளிக்கிழமை கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடைபெறாது என, மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. எனவே, பற்றாக்குறையை போக்க, அரசு கூடுதலாக தடுப்பூசிகளை ஒதுக்கி முகாம்களை போட வேண்டும் என்பது கோவை மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.