பறவைகள் கணக்கெடுப்பு துவக்கம்: அரிய வகை பறவைகள் பதிவு
ஆனைமலை புலிகள் காப்பகம், திருப்பூர் வனக்கோட்டத்திற்குட்பட்ட குளங்களில் நேற்று ஈர நில பறவைகள் கணக்கெடுப்பு துவங்கிய போது, அரிய வகை பறவைகள் பதிவு செய்யப்பட்டன.;
ஆனைமலை புலிகள் காப்பகம், திருப்பூர் வனக் கோட்டத்திற்குட்பட்ட, உடுமலை அருகேயுள்ள மருள்பட்டி குளம், பாப்பான்குளம், செட்டியார் குளம், சின்ன வீரம்பட்டி குளம், கரிசல்குளம், ஒட்டு குளம், பெரியகுளம், செங்குளம், உப்பாறு அணை உள்ளிட்ட, 20 நீர் நிலைகளில், ஒருங்கிணைந்த ஈர நில பறவைகள், இரு நாட்கள் கணக்கெடுப்பு துவங்கியது.
வனத்துறையினர், திருப்பூர் இயற்கை கழகம் மற்றும் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். முதல் நாளான நேற்று, கணக்கெடுப்பாளர்களுக்கான பயிற்சி, தரவு புத்தகம் ஆகியவற்றை வழங்கப்பட்டு, குளங்கள் மற்றும் கரையிலுள்ள புதர்களில் வசிக்கும் பறவைகள் குறித்த கணக்கெடுப்பு நடந்தது.
உடுமலை வனச்சரகர் சிவக்குமார், உயிரியலாளர் மகேஷ்குமார், தன்னார்வ தொண்டு நிறுவன நிர்வாகிகள் ரவிக்குமார், கார்த்திகேயன் மற்றும் வனத்துறை குழுவினரால், செங்குளம், பெரிய குளம் உள்ளிட்ட சுற்றுப்பகுதியிலுள்ள குளங்களில் கணக்கெடுப்பு நடந்தது.
இதில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பறவைகள், நீர்நிலைகளின் அருகிலுள்ள உள்ள புதர்களில் வசிக்கும் அரிய வகை பறவைகள், வண்ணங்களில் அழகாகவும், சிறப்பு மிகுந்த குணாதிசியங்களை கொண்ட பறவைகள் நேரில் பார்க்கப்பட்டு, பதிவு செய்யப்பட்டது.
இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை பகுதிகளில் ஆண்டு முழுவதும் நீர் இருப்பும், உள்நாடு மற்றும் வெளி நாட்டு பறவைகள், வசிப்பதற்கான இயற்கை சூழல் மற்றும் மீன், பூச்சி இனங்கள் என வளமான பகுதியாக உள்ளது.
இதனால், அரிய வகை பறவை இனங்கள் ஏராளமாக வசித்து வருகின்றன. வலசை போதல் நிகழ்வாக, பல ஆயிரம் கி.மீ.,துாரம் பயணித்து, இக்குளங்களுக்கு வந்து, முட்டையிட்டு அடை காத்து, குஞ்சு பொரித்தும் வருகின்றன.
கணக்கெடுப்பில், மாங்குயில், நீலதாளை கோழி, நீர் காகம், புள்ளிச்சில்லை, நாமகோழி சாம்பல் நாரை, புள்ளி மூக்கு வாத்து, மைனா, புதர் காடை, கொக்குகள், மீன் கொத்தி, பச்சை கிளி, கரிச்சான், நீல வால் பஞ்சுருட்டன், தையல் சிட்டு, ஊதா தேன்சிட்டு, கதிர் குருவி, சிட்டு குருவி, குயில், கவுதாரி, பனை உழவாரன், வால்காக்கை என, ஒரே நாளில், 34 வகையான பறவைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்றும் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
குளம், குட்டைகள் வளமாகவும், ஈர நிலங்கள் மற்றும் அதனை சார்ந்துள்ள பறவை இனங்கள், வெளி நாடுகளிலிருந்து, 'வலசை' போதல் நிகழ்வாக வரும் பறவை இனங்களை காக்கவும், அவற்றின் வாழ்வியல் சூழல்களை சிதைக்காமல் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்தும், விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது என்று கூறினார்