மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் அமைச்சர் முத்துசாமி நேரில் ஆய்வு

வால்பாறையில் மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர் முத்துசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2023-07-07 10:57 GMT

மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்யும் அமைச்சர் முத்துசாமி 

வால்பாறையில் மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஊமையான்டி முடக்கு பகுதியில் சாலையில் மரம் விழுந்ததையடுத்து நெடுஞ்சாலை துறையினரால் மரம் அகற்றப்பட்டு வருவதையும், வால்பாறை அரசு கலை அறிவியல் கல்லூரியில் ஏற்படுத்தப்பட்டுள்ள தற்காலிக நிவாரண முகாமினையும், கூழாங்கல் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினையும், அமைச்சர் முத்துசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், வால்பாறை நகராட்சி சமுதாய கூடத்தில் முகாமிட்டுள்ள தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினரை நேரில் பார்வையிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: முதலமைச்சர் உத்தரவுப்படி, வால்பாறையில் மழை பாதிப்புகள் குறித்து இன்று நேரில் ஆய்வு செய்யப்பட்டது. வால்பாறை பகுதிகளில் கனமழை வரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள காரணத்தால், பேரிடர் ஏற்பட்டால் அதிலிருந்து மக்களை மீட்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மின்சாரத்துறை, தீயணைப்புத்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து மேற்கொண்டு வருகின்றன.

தேவையான மீட்புக்கருவிகளும் தயார் நிலையில் உள்ளன. பேரிடர் மீட்புபணியினை மேற்கொள்ள, ஒரு துணை காவல் கண்காணிப்பாளர், ஒரு காவல் உதவி ஆய்வாளர், மீட்பு படையினர் 104 காவலர்கள் என மொத்தம் 106 பேர் கொண்ட தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் தயார்நிலையில் உள்ளனர்.

மழையினால் 6 இடங்களில் விழுந்த மரங்களையும், 2 இடங்களில் ஏற்பட்ட மண்சரிவையும், நெடுஞ்சாலைத்துறை மூலம் உடனடியாக அகற்றப்பட்டுள்ளன. சுகாதாரத்துறை சார்பில் மருத்துவமனையில் தேவையான மருத்துவர்கள், படுக்கைவசதிகள், மருந்துகளும் தயார் நிலையில் உள்ளன. மழையினால் பாதிக்கப்படும் பகுதிகளில் வசிக்கும் மக்களை பத்திரமாக மீட்டு தங்க வைப்பதற்காக 10 இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்து முன்னேற்ப்பாட்டு பணிகளும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று கூறினார்

ஆய்வின்போது, கலெக்டர் கிராந்திகுமார் பாடி, பொள்ளாச்சி சப்-கலெக்டர் பிரியங்கா, உதவி காவல் கண்காணிப்பாளர் பிருந்தா, வால்பாறை நகராட்சி தலைவர் அழகு சுந்தரவள்ளி, நகர்மன்ற துணைத் தலைவர் ச.செந்தில் குமார், வட்டாட்சியர் அருள்முருகன், உள்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர். 

Tags:    

Similar News