கோவை :குடியிருப்பு பகுதி தொட்டியில் தாகம் தீர்த்து சென்ற யானைகள்
கோவையில், குடியிருப்புப்பகுதி தண்ணீர் தொட்டியில் தாகம் தீர்த்து சென்ற யானைகளின் காட்சி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.;
கோவை மாவட்டம், தடாகம் பள்ளத்தாக்கு, 24 வீரபாண்டி ஊராட்சிக்கு உட்பட்ட மருதம் கீழ்பதி என்ற கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு பொதுமக்கள் பயன்பாட்டுக்காக தண்ணீர் தொட்டி ஒன்று கட்டப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து குட்டிகளுடன் வந்த யானை கூட்டம், தண்ணீர் குடித்து பின்னர், நீண்ட நேரத்திற்கு பிறகு , வனப்பகுதிக்குள் சென்றன. காட்டு யானைகள் ஊருக்குள் வந்து தண்ணீர் குடித்த காட்சிகளை அப்பகுதியை சேர்ந்த சிலர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்தனர். தற்போது அந்த வீடியோ காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கோடை காலம் என்பதால் வனப்பகுதிகளில் விலங்குகளுக்காக அமைக்கப்பட்டுள்ள தொட்டிகளில், நீர் நிரப்ப வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்களும், வன உயிரின ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.