கோவில்களில் உள்ள காலிப்பணியிடங்கள் அடுத்த மாத இறுதிக்குள் நிரப்பப்படும் : அமைச்சர் சேகர்பாபு

நலிவடைந்த உப கோவில்களை ரூ.10 லட்சத்திற்கும் மேல் வருமானம் உள்ள கோவில்களுடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தகவல்;

Update: 2021-07-24 13:00 GMT

அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றங்கரையில் உள்ள அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் மற்றும் தேக்கம்பட்டி அருள்மிகு ஸ்ரீ வனபத்ரகாளியம்மன் திருக்கோவில், காரமடை அரங்கநாதர் திருக்கோவில் ஆகியவற்றில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். அவருக்கு வனபத்ரகாளியம்மன் திருக்கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர், சிறப்பு அலங்காரத்தில் இருந்த அம்மனை தரிசனம் செய்து அரசு அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். தொடர்ந்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, திருக்கோவில்களில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் பணியாளர்கள், கருணை அடிப்படையில் வாரிசுகளுக்கு வேலை, திருக்கோவில்களில் காலியாக உள்ள காலிப்பணியிடங்கள் அடுத்த மாதம் இறுதிக்குள் நிரப்பப்படும் எனத் தெரிவித்தார். ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் யானைகள் முகாம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், 3 மாதத்திற்கு ஒரு முறை கோவில் யானைகளுக்கு முழு உடற்பரிசோதனை நடத்தப்படும் எனவும்,15 நாட்களுக்கு ஒருமுறை மருத்துவர்கள் மூலம் பரிசோதனைகள் நடத்தப்படும். மேலும், யானைகளுக்கு குளியல் தொட்டி, காலை - மாலை இருவேளைகளிலும் வயதிற்கேற்றார் போல, மருத்துவரின் அனுமதியுடன் நடைபயிற்சி உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருவதாகவும், தேவை ஏற்பட்டால் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் நடத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும், யானைகள் இல்லாத கோவில்களுக்கு வீட்டில் வளர்த்து வரும் உரிமையாளர்கள் தானமாக வழங்கினால் சட்டப்படி இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும், நலிவடைந்த உப கோவில்களை ரூ.10 லட்சத்திற்கும் மேல் வருமானம் உள்ள கோவில்களுடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும், இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தால் யாராக இருந்தாலும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

Tags:    

Similar News