சந்தன மரத்தை வெட்டி கடத்த முயன்ற நான்கு பேர் கைது
கோவை மேட்டுப்பாளையம் அருகே, சந்தன மரத்தை வெட்டி கடத்த முயன்ற நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.;
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கூடலூர் கவுண்டம்பாளையம்- கட்டாஞ்சிமலை இடையே, வனவர் தாமஸ் தலைமையில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். நள்ளிரவு 1மணியளவில் வடக்கு சுற்று தடாகம் காப்பு காட்டு எல்லையில் வெளிச்சம் நகர்வது கண்ட வனத்துறையினர், தோலம்பாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த வனச்சரக அலுவலர் செல்வராஜூக்கு தகவல் தெரிவித்தனர். அவரது தலைமையில் இருந்த வனவர்கள் முத்து,மதுசூதனன், கல்யாணசுந்தரம், சதீஷ் மற்றும் உமாசங்கரன் ஆகியோர் கொண்ட குழு வெளிச்சம் தென்பட்ட பகுதியை அடைந்து அங்கிருந்த நான்கு நபர்களை சுற்றி வளைத்தனர்.
அவர்களிடத்தில் இருந்த ரம்பம், வெட்டுகத்தி உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டதில், சந்தன மரத்தை வெட்டி திருட முயன்றதும் தெரியவந்தது. சந்தன மர கடத்தலில் ஈடுபட்டது கேரள மாநிலம் வயநாடு மாவட்ட மானந்தவாடி பகுதியை சேர்ந்த ஜாலி ஜேக்கப்(55), பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்த மொய்தீன்(44), கோவை நரசிம்மநாய்க்கன் பாளையத்தை சேர்ந்த ஜெகதீஷ்(54), மேட்டுபாளையம் தாலுக்கா அத்திகடவு சுண்டபட்டி பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (36) என்பது தெரிய வந்தது. பிடிபட்ட நான்கு பேர் மீதும் பெ.ந.பாளையம் வனசரகத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு தலா 10,000 வீதம் 40,000 அபராதம் விதிக்கபட்டது.