'ஆப்ரேஷன் பாகுபலி' - ரேடியோ காலர் பொருத்த வனத்துறையினர் தீவிர முயற்சி

கோவையில், பாகுபலி யானையை பிடித்து, ஜி.பி.எஸ் தொழில்நுட்பம் கொண்ட ரேடியோ காலர் பொருத்தும் முயற்சியில், 2ம் நாளாக வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.;

Update: 2021-06-28 11:18 GMT

பாகுபலி யானையை பிடிக்க, மயக்க ஊசி பொருத்தும் வனத்துறை மருத்துவர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் திரியும் 'பாகுபலி' என்ற காட்டு யானை நடமாடி வருகிறது. இதுவரை இது, மனிதர்கள் யாரையும் தாக்கவில்லை என்றாலும், விளைநிலங்களை சேதப்படுத்தி வருகிறது. அந்த யானையை அடர் வனப்பகுதிக்குள் விரட்ட, வனத்துறையினர் முடிவு செய்தனர்.

பாகுபலி யானையை பிடித்து, ஜி.பி.எஸ் தொழில்நுட்பம் கொண்ட ரேடியோ காலர் பொறுத்தி, அதன் நடமாட்டத்தை கண்காணிக்க வனத்துறையினர் முயன்று வருகின்றனர். இதற்காக பொள்ளாச்சி டாப்சிலிப் பகுதியில் இருந்து கலீம், மாரியப்பன், வெங்கடேஸ் என்ற 3 கும்கி யானைகள் மேட்டுப்பாளையத்திற்கு வரவழைக்கப்பட்டன. அதை தொடர்ந்து, யானைக்கு ரேடியோ காலர் பொருத்துவதற்கான நடவடிக்கையை வனத்துறையினர் நேற்று துவக்கினர்.

கும்கி யானைகளின் உதவியுடன் மேடு பள்ளங்கள் இல்லாத சமதள பரப்புக்கு, பாகுபலி யானை வரவழைக்கப்பட்டு, மயக்க ஊசி செலுத்தி பிடித்து, கழுத்தில் ரேடியோ காலர் பொருத்த திட்டமிட்டனர். ஆனால், பாகுபலியோ, ஓரிடத்தில் இல்லாமல் சுற்றி வருகிறது. அத்துடன், மழை பெய்ததால், நேற்று ரேடியோ காலர் பொருத்த முடியவில்லை.

இந்த நிலையில், இரண்டாவது நாளாக ரேடியோ காலர் பொருத்துவதற்கான முயற்சிகளை வனத்துறையினர் தொடங்கினர். 5 மருத்துவக்குழுவினர் வெவ்வேறு இடங்களில் மயக்க ஊசி செலுத்த தயாராக இருந்தனர். இன்று காலையில்,  ஒசூர் மருத்துவர் பிரகாஷ் செலுத்திய மயக்க ஊசி, யானை மீது படாமல் குறி தவறியது. யானைக்கு மீண்டும் மயக்க ஊசி செலுத்தும் முயற்சியில் வனத்துறை மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News