விவசாயி மீது பொய் வழக்கு: கிராம மக்கள் கடையடைப்பு போராட்டம்
வாக்குவாதத்தில் ஈடுபடும் கோபால்சாமியை கிராம உதவியாளர் முத்துச்சாமி ஆபாசமாக பேசி தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியானது.;
கோவை மாவட்டம் ஒட்டர்பாளையம் கிராமத்தில் கடந்த 6ஆம் தேதி விவசாயி கோபால்சாமி என்பவர் தனது நிலத்திற்கான ஆவணங்களை சரிபார்க்க சென்றார். அப்போது கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வி மற்றும் உதவியாளர் முத்துச்சாமி ஆகியோருடன் கோபால்சாமிக்கு வாய்த்தகராறு ஏற்பட்டது. அப்போது கோபால்சாமி பட்டியல் இனத்தை சார்ந்த கிராம உதவியாளர் முத்துசாமியை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்ததாக வீடியோ வெளியானது.
இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவின்பேரில் மாவட்ட மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் விசாரணை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்தார். இதனையடுத்து விவசாயி கோபால்சாமி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று எடுக்கப்பட்ட வீடியோ பதிவின் மற்றொரு பகுதி சில தினங்களுக்கு முன்பு வெளியானது. அதில் வாக்குவாதத்தில் ஈடுபடும் கோபால்சாமியை கிராம உதவியாளர் முத்துச்சாமி ஆபாசமாக பேசி தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியானது. இதையடுத்து முத்துசாமி காலில் விழுந்து மன்னிப்பு கேட்பது போல நாடகமாடியது தெரியவந்தது. அதிகாரிகள் விசாரணையின் போது கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவியாளர் தவறான தகவல்களை அளித்ததால் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில் கோபால்சாமி மீது போடப்பட்ட வழக்கை திரும்பப் பெறக்கோரி, இன்று காலை 6 மணி முதல் அன்னூர் சுற்றுவட்டார பகுதியில் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கோபால்சாமி மீது போடப்பட்ட வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். அதிகாரிகளுக்கு தவறான தகவல் அளித்து வன்கொடுமை பிரிவின் கீழ் கோபால்சாமி மீது வழக்குப்பதிவு செய்யக் காரணமாக இருந்த கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வி மற்றும் உதவியாளர் முத்துசாமியை பணியிடை நீக்கம் செய்ததோடு மட்டுமல்லாமல், அவர்கள் நிரந்தரமாக பணியில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். கோபால்சாமி மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்யாவிட்டால் அடுத்த கட்ட போராட்டத்தை ஈடுபடப்போவதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.