நாட்டு வெடிகுண்டு வைத்து காட்டுப்பன்றி வேட்டையாட முயற்சி - 3 பேர் கைது
கோவை அருகே வனப்பகுதியில், நாட்டு வெடிகுண்டு வைத்து காட்டுப்பன்றி வேட்டையாட முயன 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோயம்புத்தூர் சிறுமுகை சரக வனத்துறை பணியாளர்கள், இன்று தேன்கல் கரடு அருகே வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கரடை ஒட்டியுள்ள இலுப்பநத்தம் கிராமம், செல்வம் என்பவரது தோட்டத்தில் சந்தேகப்படும் வகையில் மூன்று நபர்கள் அதிகாலையில் கையில் டார்ச் லைட்டுடன் சுற்றிக் கொண்டிருந்தனர்.
வனப் பணியாளர்கள் மறைந்து அவர்கள் அருகே சென்று பார்த்தனர். அப்போது மார்டின் (58) என்பவர் கையில், அவுட் காய் என்ற நாட்டு வெடிகுண்டுகள் 9 வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை பிடித்து வனத்துறையினர் விசாரித்தபோது, காட்டுப் பன்றியை வேட்டையாட நாட்டு வெடிகுண்டை பயன்படுத்தியது தெரியவந்தது.
மேலும், அவர்களிடம் விசாரித்த போது மறைத்து வைத்திருந்த 8 நாட்டு வெடிகுண்டுகளுடன் சேர்த்து மொத்தம் 17 நாட்டு வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டன. சட்ட விரோதமாக நாட்டுவெடி குண்டுகளை பயன்படுத்தியதற்காக மார்டின், செல்வம் மற்றும் சிலுவை முத்து ஆகியோர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் மூவரையும் சிறுமுகை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.