தெருவில் கேட்பாரற்று கிடந்த பணத்தை உரியவர்களிடம் ஒப்படைத்த 10ம் வகுப்பு மாணவர்கள்
கணேசபுரம் அருகே சாலையில் கேட்பாரற்று கிடந்த ரூ.8950 பணத்தை உரிமையாளரிடம் நேர்மையாக ஒப்படைத்த 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு குவியும் பாராட்டு.;
தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த 6 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக கோவை மாவட்டம் அன்னூரை அடுத்துள்ள கணேசபுரம் பகுதியில் உள்ள அந்தோணியார் பள்ளியில் பயிலும் செம்மாணிசெட்டிபாளையம் பகுதி மாணவர்கள் 7 பேரும் நாளை கணித தேர்வு என்பதால் சிறப்பு வகுப்பிற்கு சென்றுள்ளனர்.
சிறப்பு வகுப்பிற்கு சென்று விட்டு வந்த மாணவர்கள் 7 பேரும் கணேசபுரம் டூ செம்மாணிசெட்டிபாளையம் சாலையில் இன்று மாலை வீடு திரும்பி கொண்டு இருந்துள்ளனர். அப்போது,சாலையில் பை ஒன்று கேட்பாரற்று கிடப்பதை கண்டுள்ளனர். அதனை பிரித்து பார்த்த மாணவர்கள் பையில் ரூ.8950 ரொக்கப்பணம் மற்றும் சில ஆவணங்கள் இருப்பதையும் கண்டனர்.
இதனையடுத்து மாணவர்கள் பிரஜன்,சாதனா,பிரனிகா ஸ்ரீ, இந்து, ரித்திகா, ஜெயப்பிரகாஷ், லலித் குமார் உள்ளிட்ட 7 பேரும் பையில் இருந்த ஆவணங்களை வைத்து பையின் உரிமையாளர் செம்மாணிசெட்டிபாளையத்தை சேர்ந்த பால் வியாபாரியான தேவராஜ் என்பதை கண்டறிந்துள்ளனர்.
இதனையடுத்து பையினை பத்திரமாக பால்வியாபாரியான தேவராஜிடம் நேர்மையுடன் ஒப்படைத்துள்ளனர். பணம் இருந்த பையினை பெற்றுக்கொண்ட தேவராஜ் மாணவர்களுக்கு தங்களது நன்றியினை தெரிவித்துக் கொண்டனர். சாலையில் கேட்பாரற்று கிடந்த பணப்பையினை நேர்மையுடன் ஒப்படைத்த மாணவர்களை அப்பகுதி மக்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதுடன், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.