முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு 10 ஆயிரம் ரூபாய் வழங்கிய 98 வயது மூதாட்டி..!
சிறிது சிறிதாக சேமித்து வைத்திருந்த ரூபாய் பத்தாயிரத்தை முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கினார்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த, சிறுமுகை அருகே உள்ள அன்னதாசம் பாளையத்தை சேர்ந்தவர் கன்னியம்மாள். 98 வயது மூதாட்டியான இவரது கணவர் நஞ்சப்ப உடையார் சுதந்திரப் போராட்ட தியாகிவார். தனது கணவரின் மறைவுக்குப் பின் சுதந்திரப் போராட்ட தியாகியின் மனைவி என்ற அடிப்படையில் இவருக்கு அரசு சார்பில் வழங்கப்படும் உதவித் தொகையை பெற்று வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில், இவர் சிறிது சிறிதாக சேமித்து வைத்திருந்த ரூபாய் பத்தாயிரத்தை முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு கோவை வடக்கு மாவட்ட தி.மு.கழகத்திற்குட்பட்ட காரமடை கிழக்கு ஒன்றிய பொருப்பாளரான S.M.T. கல்யாணசுந்தரம் அவர்களிடம் வழங்கியுள்ளார். இது குறித்து மூதாட்டி கன்னியம்மாள் கூறும் போது, முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் செயல்பாடு தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் அதற்காக அவருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார். 98 வயது மூதாட்டி தனது சேமிப்பிலிருந்து கிடைத்த தொகையை முதலமைச்சரின் வேண்டுகோளை ஏற்று கொரோனா நிவாரண நிதியாக வழங்கியது அனைவரைம் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.