மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழா: நாளை தொடங்குகிறது

பிரசித்தி பெற்ற ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

Update: 2023-01-20 09:03 GMT

மாசாணியம்மன் கோவில் கொடிக்கம்பத்துக்கு மரத்தை தேர்வு செய்து ஊர்வலமாக கொண்டு வரும் பக்தர்கள்

ஆனைமலை மாசாணியம்மன் கோவில் கோவை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக விளங்குகிறது. உப்பாற்றங்கரையில் அமைந்துள்ள இந்த கோவிலில் அம்மன் சயனநிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். குறிப்பாக அமாவாசை தினங்களில் இந்த கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

ஆண்டுதோறும் இந்த கோவிலில் நடைபெறும் குண்டம் திருவிழா மிகவும் விசேஷமானது ஆகும். இந்த ஆண்டுக்கான குண்டம் திருவிழா நாளை (21-ம் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

கொடியேற்றத்துக்காக வனப்பகுதியில் இருந்து மரம் வெட்டி எடுத்து வரும் நிகழ்ச்சியில் ஆனைமலை மாசாணியம்மன் கோவில் நற்பணி மன்றத்தினர், முறைதாரர்கள், அம்மன் அருளாளிகள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டவர்கள் சர்க்கார்பதியில் உள்ள அடர்ந்த காட்டில் இருந்து 65 அடி நீளம் உள்ள மூங்கில் மரத்தை கொடிக்கம்பத்துக்கு தேர்வு செய்து வெட்டி எடுத்து வந்தனர்.

பின்னர் சர்க்கார்பதி மாரியம்மன் கோவிலில் வைத்து சிறப்பு பூஜை செய்து, 16 கிலோ மீட்டர் தொலைவுக்கு தோளில் சுமந்து மாசாணியம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக கொண்டு வந்தனர். அந்த கம்பத்தில் நாளை காலை 7.30 மணிக்கு கொடியேற்றப்படுகிறது.

இதையடுத்து தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் சிறப்பு அலங்கார, அபிஷேக பூஜைகள் நடைபெறும். அதைத்தொடர்ந்து பிப்ரவரி 3-ம் தேதி நள்ளிரவு ஒரு மணிக்கு ஆழியாற்றங்கரையில் மயான பூஜையும்,

4-ம் தேதி காலை 7.30 மணிக்கு சக்தி கும்பஸ்தாபனமும், மாலை 6.30 மணிக்கு மகா பூஜையும் நடக்கிறது.

5-ம் தேதி காலை 10.30 மணிக்கு குண்டம் கட்டும் நிகழ்ச்சியும், மாலை 6.30 மணிக்கு சித்திரத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும், இரவு 10 மணிக்கு குண்டம் பூ வளர்த்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது.

6-ம்தேதி காலை 6.30 மணிக்கு பக்தர்கள் குண்டம் இறங்குகிறார்கள்.

7-ம் தேதி காலை 7.30 மணிக்கு கொடியிறக்குதல், 10.30 மணிக்கு மஞ்சள் நீராடுதல், இரவு 8 மணிக்கு மகாமுனி பூஜை,

8-ம் தேதி காலை 11.30 மணிக்கு மகா அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.

திருவிழாவிற்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் விஜயலட்சுமி மற்றும் கோவில் அலுவலர்கள் செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News