வால்பாறை அருகே குட்டி ஆண் யானை உயிரிழப்பு
வால்பாறை அருகே பச்சமலை எஸ்டேட் சூடக்காடு பகுதியில் ஆண் குட்டி யானை உயிரிழந்தது.;
கோவை மாவட்டம், வால்பாறையை அடுத்த பச்சமலை எஸ்டேட் வன எல்லைப் பகுதியில் மனிதர் வன உயிரின மோதல் தடுப்புக் குழுவினா் யானைகள் நடமாட்டம் குறித்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது பச்சமலை எஸ்டேட் சூடக்காட்டில் குட்டி யானை ஒன்று இறந்து கிடப்பதை பார்த்துள்ளனா். இது குறித்து வால்பாறை வனச் சரக அலுவலா் வெங்கடேஷுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குநா் பா்கவதேஜா உத்தரவின்பேரில் கால்நடை உதவி மருத்துவா் செந்தில்நாதன் முன்னிலையில் யானையின் உடல் உடற்கூராய்வு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் உயிரிழந்தது ஒன்றரை வயது ஆண் யானை என்பது தெரியவந்தது.
ஆனாலும், யானையின் இறப்புக்கான காரணம் குறித்து கண்டறிய யானையின் மாதிரிகள் சேகரித்து ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக வனச் சரக அலுவலா்கள் தெரிவித்தனா்