விவசாயிகளுக்கான மத்திய அரசு கடன் அட்டை திட்டம்
ரிசர்வ் வங்கி மற்றும் தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி (நபார்டு) ஆகியவற்றுடன் இணைந்து, மத்திய அரசு, விவசாயிகளுக்கான கடன் அட்டை திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
விவசாயிகளுக்கு தேவையான நிவாரணம் வழங்கும் நோக்கோடு, ரிசர்வ் வங்கி மற்றும் தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி (நபார்டு) ஆகியவற்றுடன் இணைந்து, மத்திய அரசு, விவசாயிகளுக்கான கடன் அட்டை திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் வாயிலாக விவசாயிகளுக்கு குறைவான வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது.
பொதுவாக, விவசாய கடன் அட்டை, ஐந்து ஆண்டுகளுக்கு தான் செல்லுபடியாகும். ஆனால், கட்டாயம் ஆண்டுதோறும் புதுப்பிக்க வேண்டும். பயிர்களின் அறுவடை மற்றும் விற்பனைக்கு பிறகு, கடனை திருப்பி செலுத்த வேண்டும்.
கடன் காலம், 12 மாதங்கள். ஒருவேளை பயிர் விளைச்சல் பாதிப்பு அல்லது ஏதேனும் இடர்பாடு ஏற்பட்டால், கடன் தொகையை செலுத்தும் காலத்தை, நான்கு ஆண்டுகள் அல்லது அதற்கு மேலே நீட்டித்துக் கொள்ள முடியும்.
அதிகபட்ச கடன் தொகை மூன்று லட்சம். விவசாயிகள் கடன் தொகையுடன் விதைகள், உரங்கள், விவசாய உபகரணங்கள் வாங்கலாம். சராசரியாக, 9 சதவீத வட்டியில் கடன் கிடைக்கும். நல்ல 'சிபில் ஸ்கோர்' இருந்தால், அதிக கடன் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதேபோல் நல்ல சிபில் ஸ்கோர் இருந்தால், வட்டி வீதம் குறைவாக இருக்கும்.
விவசாய கடன் அட்டை திட்டம் வாயிலாக, பயிர்களுக்கு காப்பீடும் பெறலாம். குறிப்பிட்ட சில பயிர் கடன் வகைகளுக்கு தேசிய பயிர் காப்பீடு திட்டத்தில், காப்பீடு பெறலாம். இந்த கடன் அட்டை வைத்திருப்பவர்கள், இயற்கை பேரிடர்கள் அல்லது பூச்சி தாக்குதல்கள் பாதிப்புகளை சந்தித்தால், நிவாரணம் பெற முடியும். 70 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு விபத்து காப்பீடும் வழங்கப்படுகிறது.
விவசாய கடன் அட்டை பெற தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் வாயிலாக எளிதாக பெறலாம். விவசாயிகளுக்கு கடன் அட்டை வழங்கும் முன், வங்கி விண்ணப்பதாரரின் கிரெடிட் ஸ்கோரை கண்டிப்பாக சரி பார்க்கும். அதே போல விண்ணப்பதாரரின் நிலம், பயிர் முறை, வருமானம் போன்றவற்றையும் வங்கி பரிசோதிக்கும். அதன் பிறகு வங்கி விவசாயிகளுக்கான கடன் அட்டை வழங்கும்.
அனைத்து விவசாயிகளும், விவசாய கடன் அட்டை பெற்றிருக்க வேண்டும் என்ற நோக்கத்தில், அரசு செயல்படுவதால், இந்த வாய்ப்பை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.