முன்பகையால் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கு: 5 பேர் கைது
இன்ஸ்டாகிராமில் அரிவாள் வைத்திருப்பது போன்று ஒரு புகைப்படத்தை பதிவிட, எதிர் தரப்பினர் கிண்டல் செய்ததாக தெரிகிறது.;
கோவை காந்திமாநகர் பகுதியைச் சேர்ந்தவர் அசோக் குமார் (26). அதே பகுதியில் கட்டிட வேலை செய்து வருகிறார். திருமணமான இவருக்கு ஒரு மகள் உள்ளார். அசோக்குமார் உள்ள தரப்புக்கும், அடுத்துள்ள பகுதியில் உள்ள குழு இளைஞர்களுக்கும் இடையே அடிக்கடி ஏரியா சண்டை நடைபெற்று வந்துள்ளது. சம்பவத்தன்று, இன்ஸ்டாகிராமில் அரிவாள் வைத்திருப்பது போன்று ஒரு புகைப்படத்தை, அசோக் குமார் பதிவிட்டுள்ளார். இதை பார்த்த எதிர்த்தரப்பு வாலிபர்கள் சிலர், கிண்டல் செய்ததாக தெரிகிறது. இவர்களுக்குள் ஏற்கனவே முன்பகையோடு ஏரியா தகராறும் இருந்துள்ளது.
இந்நிலையில், கடந்த ஐந்தாம் தேதி அசோக் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தபோது, பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள், அவரை கொடூரமாக வெட்டிகொலை செய்து விட்டு தப்பினர். அசோக்குமார் உயிரிழந்த நிலையில், இது தொடர்பாக சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் கோவை புலியகுளம் விக்கு (எ) சண்முகம், கீரணத்தம் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ், சரவணம்பட்டியை சேர்ந்த பாபு, அமர்நாத் மற்றும் கணபதியைச் சேர்ந்த பிரசாந்த் என 5 பேரை கைது செய்துள்ள போலீசார், மணிகண்டன் என்கின்ற ஒர்க் ஷாப் மணியை தேடி வருகின்றனர்.