சேற்றில் வழுக்கி விழுந்த காட்டு யானை உயிரிழப்பு
சிஆர்பிஎப் முகாமிற்குள், கடந்த 6 ம் தேதியன்று ஆண் காட்டு யானை ஒன்று சேற்றில் வழுக்கி விழுந்தது.
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட சிஆர்பிஎப் முகாமிற்குள், கடந்த 6 ம் தேதியன்று ஆண் காட்டு யானை ஒன்று சேற்றில் வழுக்கி விழுந்தது. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் அந்த யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சையில் உடல் நலம் தேறிய நிலையில், வனப்பகுதிக்குள் அந்த யானை சென்றது. அந்த யானையை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்நிலையில் நேற்று காலையில் வனப்பகுதிக்கு இருந்து சுமார் 250 மீ. தொலைவில் பட்டா நிலத்திற்கு வந்து, யானை மீண்டும் உடல் நலக்குறைவால் படுத்து விட்டது.
இதையடுத்து முதுமலை வனக் கால்நடை மருத்துவர் ராஷேஸ்குமார் மற்றும் கோவனூர் கால்நடை உதவி மருத்துவர் வெற்றிவேல் ஆகியோர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அந்த காட்டு யானை சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தது. இதனைத் தொடர்ந்து யானையை பிரேத பரிசோதனை செய்த வனத்துறையினர், யானையின் உடலை தகனம் செய்தனர்.