கோவையில் கடும் போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி: கொளுத்தும் வெயிலில் களம் இறங்கிய டி.ஐ.ஜி முத்துசாமி...!
போக்குவரத்து நெரிசலை சீர்படுத்த வாகனத்தை விட்டு இறங்கி களத்தில் குதித்த டி.ஐ.ஜி முத்துசாமிக்கு பொதுமக்கள் சபாஷ் தெரிவித்துள்ளனர்.;
கோவை -மேட்டுப்பாளையம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசலை சீர்படுத்த கொளுத்தும் வெய்யிலில் நேரடியாக களம் இறங்கிய சரக டி.ஐ.ஜி முத்துசாமி.
கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் பிரதான சாலையில் மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த சாலையில் 3 இடங்களில் பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கவுண்டம்பாளையம் பாலம் பணி நிறைவடைந்தும் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது.
இதேபோல அந்த சாலையில் பெரியநாயக்கன்பாளையம் பகுதியிலும் பாலம் பணிகளும் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் ஜி என் மில்ஸ் பகுதியில் பாலம் அமைப்பு பணிகள் துரிதமாக நடைபெற்றுக்கொண்டிருப்பதால் அங்கு அனுதினமும் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.
ஆயிரக்கணக்கான வாகனங்கள் அந்த வழியாக செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். ஜி.என் மில்ஸ் பகுதி என்பது, கல்லூரி, பள்ளி மாணவ-மாணவிகள், தொழிலாளிகள், அரசு அலுவலர்கள் என அதிக அளவு மக்கள் கூடும் முக்கிய இடமாக உள்ளது.
வாகன ஓட்டிகள், அந்த பகுதியை கடப்பதற்கு மட்டுமே இரண்டு மணி நேரத்திற்கு மேலாகி விடும். வழக்கமாக இப்பகுதியில் போக்குவரத்து காவலர் நின்று சீர்படுத்தும் பணியை செய்தால் மட்டுமே வாகனங்கள் விரைவாக தங்கு தடையின்றி செல்ல முடியும்.
ஆனால், இன்று போக்குவரத்து காவலர் பணியில் இல்லாத நிலையில், அவ்வழியாக, வேறு பணி நிமித்தமாக சென்ற கோவை சரக டி.ஐ.ஜி முத்துசாமி வாகனத்தை விட்டு தானே நேரடியாக களத்தில் குதித்து போக்குவரத்தை சீர் செய்ய தொடங்கினார். இதையடுத்து, காவல்துறையில் உயர் பதவியை வகித்தும், சாலையில் கொளுத்தும் வெய்யிலில் களம் இறங்கிய டி.ஐ.ஜி முத்துசாமிக்கு கோவை மக்கள் சபாஷ் தெரிவித்துள்ளனர்.
மேலும், கோவை ஜி.என் மில் பகுதியில் நிலவும் கடும் நெரிசலை கவனத்தில் எடுத்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைவாக பாலம் பணிகளை செய்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது அதேபோல போக்குவரத்து காவலரும் கட்டாயம் அப்பகுதில் பணியில் அமர்த்தப்பட வேண்டும் என்று காவல்துறை அதிகாரிகளுக்கும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.