முட்புதரில் அழுகிய நிலையில் சிறுமியின் சடலம் மீட்பு: போலீசார் விசாரணை
கைகால்கள், கழுத்துடன் சேர்த்து கட்டப்பட்ட நிலையில், பெட்சீட்டில் சுற்றப்பட்டு பெண் சடலம் கிடப்பது தெரிய வந்தது.;
கோவை சரவணம்பட்டி அடுத்த சிவானந்தபுரம் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை தனது மகளை காணவில்லை என அவரது தாய் புலியகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மாணவியை தீவிரமாக தேடிவந்த நிலையில் இன்று காலை மாணவியின் வீட்டிற்கு அருகே இருக்கக்கூடிய முட்புதர் ஒன்றில் துர்நாற்றம் வீசுவதாக துப்புரவு பணியாளர்களுக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்தனர். அதன்பேரில் பணியாளர்கள் அங்கு வந்து பார்த்தபோது, கைகால்கள், கழுத்துடன் சேர்த்து கட்டப்பட்ட நிலையில், பெட்சீட்டில் சுற்றப்பட்டு பெண் சடலம் கிடப்பது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் அளித்த தகவலின் பேரில் அங்கு விரைந்த காவல்துறையினர் நடத்திய சோதனையில் அது மாயமான சிறுமியின் உடல் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதைதொடர்ந்து சடலத்தை மீட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன் மாணவியை கொலை செய்தது யார், எதற்காக கொலை செய்தனர் என்பது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.