தண்டவாளத்தில் போதையில் உறங்கிய நபர்: ரயில் ஏறியும் உயிர் பிழைத்த அதிசயம்

இஞ்சின் டிரைவர் ரயிலை நிறுத்த முற்பட்டப் போது, ரயில் பெட்டிகள் மது போதையில் படுத்து இருந்த நபரை கடந்து நின்றது.

Update: 2021-09-28 09:45 GMT

தண்டவாளத்தில் இருந்து மீட்கப்பட்ட நபர்.

கோவை-மேட்டுப்பாளையம் இடையே தினமும் பயணிகள் ரயில் சேவை இயங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை கோவை ரயில் நிலையத்தில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி வழக்கம் போல கோவை – மேட்டுப்பாளையம் பயணிகள் ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது துடியலூர் பகுதிக்கும், பெரியநாயக்கன்பாளையம் பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியில் தண்டவாளத்தில் ஒருவர் மது போதையில் மயங்கிய நிலையில் இருந்துள்ளார். ரயில்வே தண்டவாளத்தில் ஒருவர் படுத்திருப்பதை தூரத்தில் இருந்து கவனித்த ரயில் இன்ஜின் டிரைவர், ரயிலில் இருந்து தொடர்ந்து சத்தம் எழுப்பியுள்ளார். அந்த சத்தங்களை பொருட்படுத்தாத அந்த நபர் தண்டவாளத்தில் இருந்து எழுந்திருக்கவில்லை. இதையடுத்து இஞ்சின் டிரைவர் ரயிலை நிறுத்த முற்பட்ட போது, ரயில் பெட்டிகள் மது போதையில் படுத்து இருந்த நபரை கடந்து நின்றது.

இதையடுத்து ரயில் சில அடி தூரம் தாண்டி சென்று நின்ற நிலையில், ரயில்வே ஊழியர்கள் மற்றும் பயணிகள் இறங்கி ரயில்வே தண்டவாளத்தில் இருந்த நபரை தேடியுள்ளனர். அப்போது அந்த நபருக்கு எந்த வித காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அந்த நபரை தட்டி எழுப்பி தண்டவாளத்தில் இருந்து பத்திரமாக வெளியேற்றினர். பின்னர் போதையில் இருந்த நபர் எச்சரித்து அனுப்பி வைக்கப்பட்டார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. தண்டவாளத்தில் படுத்திருந்த நபர் மீது ரயில் பெட்டிகள் தாண்டி நின்றும், ஒரு அசம்பாவிதமும் இன்றி உயிர் தப்பிய நிகழ்வு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News