வெடிகுண்டு மிரட்டல் காரணமாக கோவை விமான நிலையத்தில் சோதனை அதிகரிப்பு

மின்னஞ்சல் மூலம் அடையாளம் தெரியாத நபர் விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.

Update: 2024-06-18 14:06 GMT

வெடிகுண்டு சோதனை

இந்தியாவில் உள்ள 40 விமான நிலையங்களுக்கு மின்னஞ்சல் மூலமாக வெடி குண்டு மிரட்டல் வந்துள்ளது. இதன் ஒரு பகுதியாக கோவை பன்னாட்டு விமான நிலையத்திற்கும் வெடி குண்டு மிரட்டல் வந்துள்ளது.

'விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டு உள்ளன, அது எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம்' என மின்னஞ்சல் மூலம் அடையாளம் தெரியாத நபர் விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.இதையடுத்து விமான நிலையங்களில் வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது. கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலைய அதிகாரிகள் மதியம் 1.30 மணியளவில் மின்னஞ்சலைப் பார்த்து, சி.ஐ.எஸ்.எஃப் மற்றும் கோவை நகர காவல் துறை அதிகாரிகளை எச்சரித்தனர்.

கோவை சர்வதேச விமான நிலையத்தின் வெளிப்புறப் பகுதியில் பி.டி.டி.எஸ் குழுவும், கோவை மாநகர காவல் துறையைச் சேர்ந்த மோப்ப நாய்க் குழுவும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டன.

இது குறித்து விமான நிலைய இயக்குநர் எஸ் செந்தில் வளவன் கூறும் போது, "நாங்கள் எச்சரிக்கை முறையில் இருக்கிறோம், நாங்கள் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து உள்ளோம். இது ஒரு குறிப்பிட்ட அச்சுறுத்தல் மின்னஞ்சல் அல்ல. இருப்பினும் நாங்கள் விமான நிலையத்தில் பாதுகாப்பை தீவிரப்படுத்தி உள்ளோம். வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சலால் விமான போக்குவரத்து பாதிக்கப்படவில்லை” என அவர் கூறினார். வெடிகுண்டு மிரட்டலை அடுத்து நடத்தப்பட்ட சோதனையால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

Tags:    

Similar News