அதிக கட்டணம்: கோவையில் மருத்துவமனையின் சிகிச்சை உரிமம் ரத்து
கோவையில், அதிக கட்டணம் வசூலித்த புகாரில், தனியார் மருத்துவமனையின் சிகிச்சை உரிமம் ரத்து செய்யப்பட்டது.;
கோவை சரவணம்பட்டியை சேர்ந்த நோயாளி ஒருவர், ஏப்ரல் 24-ம் தேதி கொரோனா அறிகுறிகளுடன், தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி, மே 20-ம் தேதி மருத்துவமனையில் உயிரிழந்தார். இறந்தவரின் மகனிடம் மருத்துவமனை நிர்வாகம் ரூ.16 லட்சம் கட்டணமாக கேட்டுள்ளது.
ஆனால் காப்பீடு செய்துள்ள தனியார் காப்பீட்டு நிறுவனத்திடம் விசாரித்ததில், ரசீதுகளில் கட்டணமாக 11.55 லட்சம் என கட்டணம் குறிப்பிடப்பட்டுள்ளது தெரிய வந்தது.
இதையடுத்து, கூடுதலாக தொகையை நிர்ணயித்து மோசடி செய்ய முயன்றதாக, கோவை மாவட்ட நிர்வாகத்திடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த புகார்கள் அடிப்படையில் விசாரணை நடத்த குழு அமைத்து, மாவட்ட ஆட்சியர் நாகராஜன் உத்தரவிட்டிருந்தார்.
சம்மந்தப்பட்ட மருத்துவமனைக்கு விசாரணைக்கு அதிகாரிகள் சென்ற போது, மருத்துவமனை நிர்வாகம் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என கூறப்படுகின்றது. விசாரணை அதிகாரிகள் கேட்ட ஆவணங்களையும் கொடுக்க மறுத்துள்ளனர்.
இதனையடுத்து, அந்த மருத்துவமனைக்கு கொரோனா சிகிச்சை அளிக்க வழங்கப்பட்ட அனுமதியை, அதிகாரிகள் ரத்து செய்தனர். இதற்கான உத்திரவினை மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் மருத்துவமனைக்கு வழங்கினார்.
மேலும் மருத்துவமனையில் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளித்து அவர்களை டிஸ்சார்ஜ் செய்யவும், விசாரணை முடியும் வரை புதியதாக யாருக்கும் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கக்கூடாது எனவும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.