கோவை விமான நிலையத்தில் 2.2 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல்
கோவை விமான நிலையத்தில் 2.2 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை விமான நிலையத்தில் நேற்று அதிகாலை 3:00 மணி அளவில், சார்ஜாவில் இருந்து ஏர் அரேபியா விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறையினர் வழக்கமான சோதனைக்கு உட்படுத்தினர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த இரண்டு பயணிகளை வருவாய் புலனாய்வு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
இதில், முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனை அடுத்து சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவர்களை சோதனை செய்ததில் உள்ளாடையிலும், உடலிலும் மறைத்து எடுத்து வரப்பட்ட 1.10 கோடி மதிப்புடைய 2.2 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், இருவரும் ராமநாதபுரத்தை சேர்ந்த நசரூதீன் முகமது சகோதரர், கலீல் ரகுமான் முஸ்தபா என்பது தெரிய வந்தது. இதனையடுத்து அவர்களை கைது செய்த வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், தங்கக் கட்டிகளை யார் கொடுத்து அனுப்பினார்கள்? இதற்கு முன்பு இதே போன்று இவர்கள் தங்கம் கடத்தி வந்த உள்ளார்களா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.