அதிகார பலத்தால் வாக்காளர்களை மிரட்டி வெற்றி பெற திமுக முயற்சி: வானதி சீனிவாசன்
திமுகவினர் மீது புகார் அளித்தால் அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுப்பதில்லை.;
வானதி சீனிவாசன் செய்தியாளர் சந்திப்பு
கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கோவையில் பல்வேறு இடங்களில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த நபர்கள்(திமுக) வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வருவதாகவும் இதனை கேட்டால் பாஜகவினரை மிரட்டுவதாகவும் தெரிவித்த அவர், இது குறித்து புகார் அளித்தால் அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுப்பதில்லை எனவும் இதனால் சில இடங்களில் கைகலப்பு ஏற்படும் சூழல் நிலவுவதாகவும் தெரிவித்தார்.
எனவே தேர்தல் ஆணையம் உடனடியாக கோவை மாவட்டத்தில் உள்ள கரூர் காரர்களை (திமுக) அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறினார். கடந்த முறை ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாத திமுக இம்முறை வெற்றி பெற வேண்டும் என்பதற்காக விதிகளை மீறி செயல்படுவதாக தெரிவித்தார். சிறுவாணி அணை முழு கொள்ளளவை எட்டுவதற்கு தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் மக்களின் தேவைகளின் மீது கவனம் செலுத்தாமல் கடைசி நேரத்தில் அதிகார பலத்தால் வாக்காளர்களை மிரட்டி வெற்றி பெற முடியும் என திமுகவினர் எண்ணுவதாக தெரிவிதார். கோவையில் உள்ள விலங்கியல் பூங்கா முழுமையாக செயல்படவும் மாநில அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றம் சாட்டினார். மேலும் நாளை முழுவதும் பாஜக மாநில தலைவர் முழுமையாக கோவையில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார்.