பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி தலைவர் தேர்தலில் திமுக, சிபிஎம் மோதல்
தலைவர் பதவிக்கு திமுக கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது.;
கோவை, பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி தலைவர் தேர்தல் இன்று காலை நடைபெற்றது. இங்கு தலைவர் பதவிக்கு திமுக கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. இதில் ஒன்றியக்குழு உறுப்பினர் சிவராஜன் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமை அறிவித்தது.
இந்நிலையில் இன்று காலை திமுக நகர செயலாளர் விஷ்வ பிரகாஷ் பேரூராட்சித் தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது வேட்பு மனுத் தாக்கல் செய்ய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பேரூராட்சி அலுவலகம் முன்பு வந்தனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை வேட்பு மனுத்தாக்கல் செய்யவிடாமல் திமுகவினர் ஒரு அறையில் அடைத்து வைத்ததாக கூறப்படுகிறது.
பின்னர் திமுக நகர செயலாளர் விஸ்வபிரகாஷ் பேரூராட்சித் தலைவராக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தினர். அப்போது அதிகாரிகள் துணையுடன் திமுகவினர் கூட்டணி தர்மத்தை மீறி பேரூராட்சித் தலைவர் பதவியை கைப்பற்றி இருப்பதாக குற்றம்சாட்டினர்.