கோவை மாணவி கொலை வழக்கு: நகைக்காக கொலை செய்த குடும்ப நண்பர் கைது
காணாமல் போன 15 வயது சிறுமி கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் அழுகிய நிலையில் சடலமாக முட்புதரில் இருந்து மீட்கப்பட்டார்.
கோவை சரவணம்பட்டி பகுதியில் காணாமல் போன 15 வயது சிறுமி கை, கால்கள் கட்டப்பட்ட அழுகிய நிலையில் சடலமாக முட்புதரில் இருந்து மீட்கப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக சரவணம்பட்டி போலீசார் முத்துகுமார் என்ற அம்மாணவியின் குடும்ப நண்பரை கைது செய்துள்ளனர். இதுகுறித்த செய்தியாளர் சந்திப்பு கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது துணை ஆணையர் உமா செய்தியாளர்களிடம் கூறியதாவது, சிறுமி கடந்த 11ம் தேதி மாயமாகியுள்ளார். நண்பர்கள் வீட்டில் இருப்பார் என்று பெற்றோர்கள் நினைத்தனர். மேலும், இதுகுறித்து புகாரும் அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சிறுமி கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் முத்துக்குமார் என்பவரை கைது செய்துள்ளோம். இவருக்கும் சிறுமியின் தாய்க்கும் நகை கொடுக்கல் வாங்கல் பிரச்சினை இருந்துள்ளது. இதனால் நகைக்காக கொலை செய்து விட்டு சிறுமி வேறு ஒரு நபருடன் சென்றுவிட்டார் என்று நாடகம் ஆடுவதற்காக முத்துக்குமார் சிறுமியை கடத்தி அதே நாளில் கொலை செய்துள்ளார். மேலும் சிறுமியின் வீட்டில் இருந்து 150 மீட்டர் தொலைவில் அவரது உடலை சாக்கில் கட்டி வீசியுள்ளார்.
இதில் முத்துக்குமார் ஏற்கனவே திருமணம் ஆனவர். அவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த வழக்கின் புலன் விசாரணை நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக இதனை ஆதாயக் கொலை என்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகிறோம். சிறுமி பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டரா உள்ளிட்ட விவரங்கள் விசாரணையின் முடிவில் தெரியவரும். எந்த ஒரு சிறுமியும் மாயமானது தொடர்பாக புகார் கிடைத்த உடனேயே, செல்போன் சிக்னல் உதவியுடன் அவர்களை தேடும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். மேலும் தொடர்ந்து பெண்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என அவர் கூறினார்.