கோவை அருகே மில்லில் கொத்தடிமைகளாக இருந்த 7 வடமாநிலப் பெண்கள் மீட்பு
கோவை அருகே, மில் ஒன்றில் கொத்தடிமைகளாக அடைக்கப்பட்டிருந்த ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 7 பெண்கள், சி.ஐ.டி.யு. முயற்சியால் மீட்கப்பட்டனர்.;
கோவை நரசிம்மநாயக்கன் பாளையம் பகுதியில் உள்ள குமரன் மில்லில், வடமாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஜார்கண்ட மாநிலத்தில் இருந்து பெண்கள் வேலைக்காக அழைத்து வரப்பட்டனர். வேலைக்காக வந்த பெண்களை கொத்தடிமைகளாக ஆலை நிர்வாகம் கடுமையான வேலை வாங்கியதாக கூறப்படுகின்றது.
சொந்த ஊருக்கு செல்லவும் ஆலை நிர்வாகம் அனுமதி மறுத்த நிலையில், ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 7 பெண்கள் தங்களை மீட்கும்படி சொந்த ஊருக்கு வாட்ஸ் அப் மூலம் வீடியோ அனுப்பினர். இதனையடுத்து அங்கிருந்து கோவை மாவட்ட சிஐடியு அலுவலகத்தை தொடர்பு கொண்டனர். சிஐடியு அமைப்பினர் ஆலை நிர்வாகத்தை தொடர்பு கொண்ட போது, அவர்கள் போதிய ஒத்துழைப்பு கொடுக்காததால் காவல்துறையில் புகார் அளித்தனர்.
இந்நிலையில், 7 பெண் தொழிலாளர்களையும் ஆலை நிர்வாகம் வெளியே அனுப்பி விட்ட நிலையில், அவர்களை சிஐடியு அமைப்பினர் மீட்டனர். குறைவான ஊதியத்தை கொடுத்து ஆலை நிர்வாகம் உழைப்பு சுரண்டலை ஈடுபட்டிருந்தாகவும், வேலை தேடி வரும் பெண் தொழிலாளர்களை சட்டத்திற்கு உட்பட்டு வேலை வாங்காமல், குமரன் ஆலை நிர்வாகம் கூடுதலாக வேலை வாங்குவதாகவும் அதற்கேற்ற ஊதியம் வழங்குவதில்லை எனவும் தெரிவித்தார்.
மொத்தம் 18 பேர் ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து வந்தவர்களில், இதர 11 பெண்கள் நிலை என்னவென்று தெரியவில்லை எனவும் சிஐடியு அமைப்பினர் தெரிவித்தனர். ஆலை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்கள் வலியுறுத்தினர். மீட்கப்பட்ட 7 பெண்களையும் ரயில் மூலம், சிஐடியு அமைப்பினர், சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.