பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மல்லிகைப் பூ காட்டி கோவையில் பிரச்சாரம்
பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து மாநில தலைவர் அண்ணாமலை மல்லிகைப் பூ காட்டி கோவையில் பிரச்சாரம் செய்தார்.;
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரச்சாரத்தின் கடைசி நாளான இன்று பல்வேறு கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக கோவை துடியலூர் பகுதி வெள்ளகிணறு பகுதியில் இரண்டாவது வார்டு பா.ஜ.க. வேட்பாளர் வத்சலாவை ஆதரித்து பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டார்.
பிரச்சாரத்தின் போது மக்களிடம் பேசிய அவர், மத்திய அரசின் திட்டங்கள் தங்கள் பகுதிக்கு வர வேண்டும் என்றால் பா.ஜ.க. வெற்றி பெற செய்ய வேண்டும் என தெரிவித்தார். இப்பகுதியில் தெருவிளக்கு பிரச்சினை அதிகமாக உள்ளதாக கூறிய அவர், பா.ஜ..க வேட்பாளர் வெற்றி பெற்றால் உடனடியாக அனைத்து தெருக்களுக்கும் தெருவிளக்குகள் போட்டு தரப்படும் என்றார்.
மேலும் பட்ஜெட்டில் பணம் ஒதுக்காமலும் அரசாணை இல்லாமலும் முதல்வர் பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருவதாகவும் கூறிய அவர் கரூர் மாவட்டத்தில் இருந்து தி.மு.க. குழு ஒன்று கோவைக்கு வந்து கொலுசுகளை வழங்கி வருவதாக குற்றம்சாட்டினார். அந்தக் கொலுசை ஆய்வு செய்த போது அதில் 16 சதவிகிதம் தான் வெள்ளி உள்ளதாகவும் குறிப்பிட்டார். சட்டமன்றத் தேர்தலின் பொழுது எப்படி காதில் பூ சுற்றினார்களோ, அதேபோன்று தற்பொழுது வந்துள்ளதாக மல்லிகைப்பூவை காண்பித்தார்.
இப்பகுதிக்கு அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வசதி வேண்டும் என்றால் அதற்கு இங்கு பா.ஜ.க. நிர்வாகி இருந்தால் தான் முடியும் எனவும், மத்திய அரசின் திட்டங்களை எங்கு செயல்படுத்தவும் பா.ஜ.க. நிர்வாகி வேண்டுமெனவும் தெரிவித்தார். மேலும் பிரதமர் முன் களப் பணியாளர்களின் காலில் விழுந்து வணங்குபவர் எனவும் கோவில்களை காக்க பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தது பா.ஜ.க. எனவும், ஆகவே பா.ஜ.க.விற்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.