கொடிசியா மையத்தில் கூடுதலாக 3 அரங்குகள், 890 படுக்கைகள்: அமைச்சர் சக்கரபாணி
கொடிசியாவில் 676 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், கூடுதலாக 890 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சக்கரபாணி கூறினார்.;
கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்த வண்ணம் உள்ளது. உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, வனத்துறை அமைச்சர் இராமச்சந்திரன் ஆகியோர் கோவையில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கோவை கொடிசியா மையத்தில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை மையம், மற்றும் இஎஸ்ஐ மருத்துவமனையில் அமைய உள்ள ஆக்ஸிஜன் படுக்கையுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையத்தையும் பார்வையிட்டனர். மேலும், அங்கு சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளின் உறவினர்களிடம் சிகிச்சை தொடர்பாக கேட்டறிந்த அமைச்சர்கள், இஎஸ்ஐ மருத்துவமனை டீன் ரவீந்திரனிடம் சிகிச்சைகள் தொடர்பாக கேட்டறிந்தனர்.
இதைத்தொடர்ந்து, உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கூறுகையில், கொரோனா நோய் தொற்று கோவையில் அதிகரித்து வருகிறது. கொரோனா நோயாளிகளுக்கு கூடுதல் படுக்கைகள் கொடிசியா அரங்கில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஏற்கனவே 2 அரங்குகளில் 676 பேர் தற்போது சிகிச்சை பெற்று வரும் நிலையில், கூடுதலாக 3 அரங்குகளில் மேலும் 890 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் 1500 க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் இங்கு மட்டுமே சிகிச்சை பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் படுக்கை வசதிகளுடன் பல ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கோவை மட்டுமின்றி, கோவையை சுற்றியுள்ள மாவட்டங்களை சேர்ந்தவர்களும் சிகிச்சைக்காக வருகின்றனர். அவர்களுக்கும் நல்ல முறையில் சிகிச்சைகள் பெறலாம். மருத்துவ சிகிச்சைக்காக எங்கும் அலைய வேண்டியதில்லை, அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் எடுத்துள்ளது என கூறினார்.