கோவை விமான நிலையத்தில் ரூ. 2 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்: 6 பேர் கைது
ரூ.1 கோடியே 92 லட்சம் மதிப்பிலான தங்க கட்டிகளும், 1 கோடியே 16 லட்சம் மதிப்பிலான எலக்ட்ரானிக் பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.;
கோவை சித்ரா பகுதியில் சர்வதேச விமான நிலையம் உள்ளது. இங்கு சிங்கப்பூர், சார்ஜா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 13ம் தேதி அதிகாலை சார்ஜாவில் இருந்து வந்த பயணிகளிடம், வருவாய் புலனாய்வு பிரிவு துறையினர் வழக்கமான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கு இடமான வகையில் வந்த 6 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததை தொடர்ந்து, அவர்கள் வைத்திருந்த உடமைகளை பரிசோதனை செய்தனர். அப்போது தங்க கட்டிகளும், சிகரெட், எலக்ட்ரானிக் பொருட்களும் மறைத்து வைத்து எடுத்து வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து 6 பேரையும் கைது செய்து வருவாய் புலனாய்வு பிரிவு போலீசார் 1 கோடி ரூபாய் 92 லட்சம் மதிப்பிலான தங்க கட்டிகளும், 1 கோடியே 16 லட்சம் மதிப்பிலான எலக்ட்ரானிக் பொருட்களையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் முதல் கட்ட விசாரணையில் இவர்கள் 6 பேரும் சென்னை மற்றும் தென் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதும் இவர்களுக்கும், பல்வேறு கடத்தல் நபர்களுடன் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து அவர்களை 6 பேரையும் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.