வால்பாறையில் குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானை கூட்டம்
நள்ளிரவு நேரத்தில் கூட்டமாக வந்து தாக்கி வீட்டில் உள்ள பொருட்களை சூறையாடியது. சேதமடைந்த வீட்டு உரிமையாளர்களுக்கு நிதிஉதவி
கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இரவு நேரங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள், குடியிருப்புக்குள் நுழைந்து, வீடுகளில் உள்ள உணவுப் பொருட்களை சாப்பிடுவதுடன், வீட்டையும் சேதப்படுத்தி வருகிறது.
வால்பாறை அருகே இஞ்சிபாறை எஸ்டேட் பகுதியில் மாடல் காலனி உள்ளது. இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 9 காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தன.
அங்கு சுற்றி திரிந்த காட்டு யானை கூட்டம், கலைச்செல்வி என்பவரின் வீட்டின் ஜன்னல் கதவை உடைத்து வீட்டிற்குள் இருந்த பீரோ, டி.வி., கட்டில், உணவுப் பொருட்களை துதிக்கையால் தூக்கி எறிந்து சேதப்படுத்தியது. மேலும் வீட்டின் முன்பு உள்ள செடிகளையும் பிடுங்கி எறிந்த வீட்டையும் சேதப்படுத்தியது. சத்தம் கேட்டு எழுந்த கலைச்செல்வி மற்றும் குடும்பத்தினர் யானைகள் வெளியில் நிற்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் வீட்டில் உள்ளவர்கள் வீட்டின் பின்பகுதியில் உள்ள கழிவறையில் சென்று தஞ்சம் அடைந்து உயிர் தப்பித்தனர். சிறிது நேரம் அங்கேயே யானைகள் சுற்றி திரிந்தன. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
வனத்துறையினர் விரைந்து வந்து யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்திற்கு பிறகு யானைகளை அடர்ந்த வனத்திற்குள் விரட்டினர்.
இதற்கிடையே இது பற்றிய தகவல் கிடைத்ததும் வால்பாறை நகராட்சி தலைவர் அழகு சுந்தரவல்லி மற்றும் துணைதலைவர் செந்தில்குமார், 15 வது வார்டு உறுப்பினர் ரவிச்சந்திரன் ஆகியோர் வனத்துறையினர் மற்றும் எஸ்டேட் மேலாளர்களிடம், யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் வராமல் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். தெருவிளக்கு அமைக்க வேண்டும் என கேட்டு கொண்டனர். மேலும் சேதமடைந்த வீட்டு உரிமையாளர்களுக்கு நிதிஉதவியும் வழங்கினர்.