கோவையிலிருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற ஹவாலா பணம் பறிமுதல்
கோவையிலிருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற ரூ.1.90 கோடி ஹவாலா பணம் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது;
தமிழக- கேரள எல்லைப்பகுதியான வாளையாறு அடுத்த புதுச்சேரி குருடிக்காடு எனுடம் இடத்தில், கஸ்பா காவல் நிலையத்தை சேர்ந்த காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த இனோவா காரை காவலர்கள் நிறுத்த முயன்றுள்ளனர். ஆனால், கார் காவலர்களை இடிக்கும் விதமாக நெருங்கி வந்த சட்டென அங்கிருந்து தப்பித்துவேகமாக சென்றுள்ளது. இதனையடுத்து அந்த காரை காவல்துறையினர் விரட்ட தொடங்கினர்.
சில நிமிடங்களுக்கு பிறகு ஒரு வழியாக கார் மடக்கி பிடிக்கப்பட்டு, காரை சோதனையிட்டபோது அதில் எதுவும் கிடைக்கவில்லை. பின்னர் காரின் அமைப்பில் மாற்றம் இருப்பதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். எனவே தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது அப்போது, காருக்குள் ரகசிய அறை ஒன்று உருவாக்கப்பட்டு அதில் பணத்தை பதுக்கி கடத்தியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
மொத்தமாக சுமார் ரூ.1.90 கோடி ரொக்கத்தை காவலர்கள் கைப்பற்றியுள்ளனர். இந்த பணத்திற்கான உரிய ரசீது எதையும் காரில் வந்தவர்கள் வைத்திருக்கவில்லை. எனவே இது தொடர்பாக காரில் வந்த இருவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
காரில் இருந்தவர்கள் கேரள மாநிலம், மலப்புரம் அங்காடிப்புரத்தை சேர்ந்த முகமது குட்டி மற்றும் புத்தனங்காடியை சேர்ந்த முகமதுநிசார் என்பது தெரியவந்தது. இவர்கள் கோவையில் இருந்து ஹவாலா பணத்தை மலப்புரம் பகுதியில் உள்ள ஒருவரிடம் ஒப்படைக்க பணத்தை கொண்டு சென்றதும் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
இதுபோன்று ஹவாலா பணம் கடத்தப்படுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்னரும் இதே போன்று அடிக்கடி பணம் கடத்தப்பட்டிருக்கிறது. இந்நிலையில், இந்த ரூ.1.90 கோடி யாரிடமிருந்து வந்தது? யாருக்கு செல்கிறது? என்பது குறித்து தற்போது கைது செய்யப்பட்டவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.