தேசியக்கொடியை முண்டாசாக அணிந்துஆட்சியர் அலுவலகம் முன்பு மறியல்
உறவினர்கள் சொத்துக்களை அபகரித்ததாக கூறி தேசியக்கொடியை முண்டாசாக அணிந்துஆட்சியர் அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தை சேர்ந்தவர் தவுலத். இவர் இன்று காலை தனது மனைவி, மாமியார், மகள், மற்றும் குழந்தையுடன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் தவுலத் மற்றும் அவரது குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டு கோஷங்களும் எழுப்பினர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் ரேஸ்கோர்ஸ் காவல்துறையினர் விரைந்து வந்தனர். பின்னர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்கள் கலைந்து செல்ல மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து காவல்துறையினர் அவர்களை குண்டுக்கட்டாக தூக்கி சென்று வண்டியில் ஏற்றி ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது, எங்களுக்கு மேட்டுப்பாளையம் பகுதியில் 8.5 ஏக்கர் நிலம் உள்ளது. ஆனால் அந்த இடத்தை எனது உறவினர்கள், எங்களுக்கு தெரியாமலேயே தி.மு.க பிரமுகர் ஒருவருக்கு விற்று விட்டனர்.
அதில் எங்களுக்கான பங்கையும் அவர்கள் தரவில்லை. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியர் அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இன்று குடும்பத்துடன் சாலைமறியலில் ஈடுபட்டோம் என்று தெரிவித்தனர்
இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
கோவை மாவட்டஅலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில், , கோவை பேரூர் செட்டிபாளையம் இந்திராநகர் பகுதியை சேர்ந்த மக்கள் கோவை மனு அளிக்க வந்தனர்.
அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, கோவை பேரூர் செட்டிபாளையம், இந்திரா நகர் பகுதியில் 30 ஆண்டுகளுக்கு முன்பு அருந்ததியர் மக்களுக்கு அரசு சார்பில் 25 குடியிருப்புகள் கட்டித் தரப்பட்டது. அந்த குடியிருப்புகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பழுதாகி விட்டது. தற்போது கட்டிடம் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு அரசு அதிகாரிகளிடமும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் பலமுறை மனுக்கள் அளித்தும் தற்போது வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் ஒரு மழை பெய்தால் வீடுகள் இடிந்து விழும் நிலை உள்ளது. மேலும் அப்பகுதியில் கழிவறை வசதி இல்லாததால் பெண்கள், கர்ப்பிணி பெண்கள், முதியோர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.எனவே மாவட்ட நிர்வாகம் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.