புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு வனத்துறை கட்டுப்பாடு
வனப்பகுதியை ஒட்டிய விடுதிகளில் பட்டாசுகள் மற்றும் வாணவேடிக்கைகளை நிகழ்த்தக்கூடாது. கேம்ப் பயர் நிகழ்ச்சிக்கு அனுமதி இல்லை.
கோவை மாவட்டத்தில் வனப்பகுதியை ஒட்டி பல்வேறு ஓட்டல்கள், நட்சத்திர விடுதிகள், பொழுதுபோக்கு மையங்கள் ஆகியவை அமைந்து உள்ளன. இங்கு புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல்வேறு கவர்ச்சிகர அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.
எனவே கோவையின் வனப்பகுதியை ஒட்டிய விடுதிகளில் தங்கியிருந்து நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் புத்தாண்டு கொண்டாட பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது அவர்கள் அங்குள்ள ஓட்டல்களில் அறைகளை முன்பதிவு செய்யத்தொடங்கி உள்ளனர். இதனால் கோவையின் வனப்பகுதியை ஓட்டி அமைந்து உள்ள ஓட்டல்களில் அறைகள் நிரம்பி வழிகின்றன.
இதற்கிடையே கோவை கோட்ட வனத்துறை நிர்வாகம் சார்பில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கும் வகையில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன.
அதன்படி வனப்பகுதியை ஒட்டி அமைந்து உள்ள தங்கும் விடுதிகள், ரிசார்ட்கள், நடத்திர விடுதிகள் மற்றும் பொழுதுபோக்கு மையங்களில் காட்டு விலங்குகளுக்கு அச்சம் தரும்வகையில் அதிக சப்தம் எழுப்பும் ஒலிபெருக்கிகளை பயன்படுத்தக்கூடாது.
விடுதிகளில் பட்டாசுகள் மற்றும் வாணவேடிக்கைகளை நிகழ்த்தக்கூடாது. கேம்ப் பயர் நிகழ்ச்சிக்கு அனுமதி இல்லை. வாடிக்கையாளர்கள் குடித்துவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது. மேலும் வாகனங்களில் அதிக ஒளி உமிழும் விளக்குகளை பயன்படுத்தக்கூடாது. மது குடித்துவிட்டு வனப்பகுதியில் வாகனங்களை இயக்கக்கூடாது. மேலும் புத்தாண்டு அன்று இரவு 8 மணிக்கு மேல் வனச்சாலைகளை பயன்படுத்தக்கூடாது.
புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது வீணாகும் உணவுப்பொருட்கள் மற்றும் தேவையற்ற கழிவுகளை வனப்பகுதியில் கொட்டக்கூடாது. தங்கும் விடுதிகளுக்கு அருகில் வன விலங்குகள் தென்பட்டால் அவற்றை உடனடியாக விரட்ட முயலாமல் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
கோவையின் வனப்பகுதியை ஒட்டி அமைந்து உள்ள விடுதி உரிமையானர்கள் மேற்கண்ட அறிவிப்புகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இல்லையெனில் சம்பந்தப்பட்ட விடுதிகளின் மீது சட்டப்படி உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை வனத்துறை நிர்வாகம் வெளியிட்டு உள்ளது. இது வனப்பகுதியை ஒட்டி புத்தாண்டு கொண்டாடுவதற்காக காத்திருக்கும் வாடிக்கையாளர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.