கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப்பயணிகளுக்கு தடை
அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கோவை குற்றால நீர் வீழ்ச்சி தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்
கோவை மாவட்டத்தில் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக கோவை குற்றாலம் விளங்கி வருகிறது. கோவை மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் இது அமைந்துள்ளது. மேலும், நாள்தோறும் இங்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக வார விடுமுறை நாட்களில் அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம்.
இதனிடையே தென்மேற்குப் பருவ மழை காரணமாக, கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மிதமான மழையும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழையும் பெய்து வருகிறது. கோவை குற்றாலத்தில் கனமழை காரணமாக நீர் வரத்து அதிகரித்துக் காணப்படுகிறது. இதனால் அருவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மேலும், அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களின் நலன் கருதி கோவை குற்றால நீர் வீழ்ச்சி தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்தனர். இதனால் அங்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மேற்குத் தொடர்ச்சி மலையில் மழை குறைந்து இயல்பான நிலைக்குத் திரும்பிய பின்னரே கோவை குற்றாலம் திறக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.