ஜி.டி.நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிய அறிவியல் மையம் திறப்பு: அமைச்சர் பங்கேற்பு
எக்ஸ்பிரிமெண்டா என்ற புதிய அறிவியல் மையம் திறப்பு விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவியல் மையம் மூலம் மாணவர்களின் அறிவுத்திறன் மேம்படும் என்றார்
கோவை ஜி.டி.நாயுடு அறக்கட்டளை சார்பில் "எக்ஸ்பி ரிமெண்டா" என்ற புதிய அறிவியல் மையம் திறப்பு விழா இன்று நடந்தது. விழாவுக்கு ஜிடி நாயுடு அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ஜி .டி. கோபால் தலைமை தாங்கினார்.
அறிவியல் மையத்தை, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்து பார்வையிட்டார். பின்னர் அவர் பேசுகையில், நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் மூலதான உற்பத்தி, நிர்வாக திறன் போன்றவைகள் தமிழகத்தில் சிறப்பாக உள்ளது. அறிவியல் ரீதியாகவும் தமிழகம் வளர்ச்சியடைந்து வருகிறது. தமிழக முதலமைச்சரின் “நான் முதல்வன்” என்ற மாணவர்களுக்கான திட்டம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. கோவை எப்போதுமே தனிச்சிறப்பு கொண்டது. தொழில்ரீதியான முன்னேற்றம், ராணுவ தளவாடங்கள் உற்பத்தி, தொழிற்நிறுவனங்களின் தேவை கள் அனைத்தும் நிறைந்த இடம் என கோவைக்கு பல சிறப்புகள் உள்ளன.
தற்போது அறிவியல் ரீதியாகவும் கோவை சிறப்புமிக்கதாக மாறியுள்ளது. 'எக்ஸ்பிரிமெண்டா' அறிவியல் மையம் மூலம் மாணவர்களின் அறிவியல் திறன் மேம்படும். அறிவியல் வளர்ச்சிக்கு இது பெரிதும் உதவும். வருங்காலங்களில் அறிவியல் வளர்ச்சி இம்மையம் புதிய உத்வேகம் அளிக்கும் என்று பேசினார்.
"இந்த மையத்தின் முக்கிய நோக்கம் ஆர்வத்தைத் தூண்டுவதும், விசாரிக்கும் மனதை வளர்ப்பதும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அறிவியலை நேரடியாகக் கற்க உதவுவதும் ஆகும்" என்று அறங்காவலர் அகிலா சண்முகம் கூறினார்.
அறிவியல் மையத்தில் உள்ள கண்காட்சிகள் உலகம் முழுவதிலும் இருந்து மிகவும் கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டு, இயக்கம், ஒலி, மாயை, ஒளியியல், கணிதம், இயற்கை, இயக்கவியல், சக்தி மற்றும் ஆற்றல், ஒளி மற்றும் வண்ணங்கள் போன்ற பல்வேறு பிரிவுகளின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அறக்கட்டளையின் பொது மேலாளர் எம்.சுரேஷ் நாயுடு கூறும்போது, “சோதனை அறிவியல் மையம் திங்கள் மற்றும் தேசிய விடுமுறை நாட்கள் தவிர அனைத்து நாட்களிலும் காலை 9 மணி முதல் மாலை 6.30 மணி வரை செயல்படும். ஒரு டிக்கெட்டின் விலை பெரியவர்களுக்கு ரூ.250 மற்றும் 17 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ரூ.150. தனியார் பள்ளிகளுக்கு சலுகை வழங்கப்படும். அரசுப் பள்ளிகளுக்கு இலவசப் போக்குவரத்தை வழங்கவும், சுமார் 30-40 குழந்தைகளுக்கு ரூ.500 வசூலிக்கவும் திட்டமிட்டுள்ளோம். எங்களிடம் தனிப்பட்ட மற்றும் காம்போ டிக்கெட்டுகள் மற்றும் குழுக்களுக்கான சிறப்பு தள்ளுபடி விலைகள் உள்ளன. மேலும், எங்கள் அனைத்து மையங்களும் அருங்காட்சியகங்களும் சக்கர நாற்காலியில் அணுகக்கூடியவை. உள்ளடக்கிய சூழலுக்காக, பரிசோதனையை உருவாக்கும் போது, ஆடியோ மற்றும் பிரெய்லி விருப்பங்களைச் சேர்ப்பதை நாங்கள் பரிசீலிப்போம்," என்று அவர் கூறினார்.
விழாவில், கௌரவ விருந்தினராக சென்னை, ஜெர்மன் தூதரக அதிகாரி மைக்கேலா குச்லேர். மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையர் பிரதாப், கோவை பாரதீய வித்யா பவன் தலைவர் பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார். ஜி.டி நாயுடு அறக்கட்டளை அறங்காவலர்கள் ஜி.டி. ராஜ்குமார், அகிலா, சண்முகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில், முதலமைச்சர்.ஸ்டாலின் தமிழகத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலங்களிலும் இல்லாத அளவிற்கு கல்வித்துறைக்கு நிதி ஒதுக்கி அதை செயல்படுத்துவது தமிழகத்தில் மட்டும் தான். அந்த அளவுக்கு கல்விக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது.
நான் முதல்வன் திட்டம் மூலம் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் புரிதல் ஏற்பட்டுள்ளது. மாணவர்கள் அடுத்து என்ன செய்யலாம் என்ற விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.
இந்தியா, ஜெர்மனி இடையே வர்த்தக உறவு அதிகம் உள்ளது. என்ஜினீயரிங் துறையில் ஜெர்மனி உலகத்துக்கே வழிகாட்டியாக உள்ளது. ஜெர்மனியில் செயல்படுத்தக்கூடிய அதன் சிறப்பு திட்டங்கள், பயிற்சிகள் கோவையில் உள்ள மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
தமிழகத்திலிருந்து ஜெர்மனிக்கு வேலை நிமித்தமாகவும், படிப்பதற்காகவும் அதிக நபர்கள் செல்கின்றனர். அந்த அளவுக்கு ஒரு நல்ல நட்பு நிலை உள்ளது. தற்போது கிராஸ் சர்டிபிகேசன் என்று சொல்லக்கூடிய சான்றிதழ் இங்கே படிக்கும் மாணவர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதாவது படித்தால் ஜெர்மனிக்கு நேரடியாக சென்று வேலைவாய்ப்பை பெறலாம். ஜெர்மனியில் படிப்பு ரீதியாக எந்த ஒரு சான்றிதழும் பெற வேண்டியது இல்லை.
இதுபோன்று பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று கூறினார்